சாதி வெறியை கண்டிக்கும் ‘மார்கழி திங்கள்’ – எடுபடுமா தந்தை – மகன் கூட்டணி?

இயக்குநர் இமயம் பாரதிராஜா மற்றும் மாஸ்ட்ரோ இளையராஜா பல ஆண்டுகளுக்கு பிறகு மார்கழி திங்கள் படம் மூலம் ஒன்று சேர்ந்துள்ளனர். மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் அக்டோபர் 27-ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் முன்னோட்ட…

இயக்குநர் இமயம் பாரதிராஜா மற்றும் மாஸ்ட்ரோ இளையராஜா பல ஆண்டுகளுக்கு பிறகு மார்கழி திங்கள் படம் மூலம் ஒன்று சேர்ந்துள்ளனர். மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் அக்டோபர் 27-ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் முன்னோட்ட காட்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. வாருங்கள் படம் எப்படி உள்ளது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

படத்தின் கதை

பழனி அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தில் ரக்சனா தனது தாத்தாவான பாரதிராஜாவுடன் வாழ்ந்து வருகிறார். 10ம் வகுப்பு படிக்கும் போது தன்னுடன் படிக்கும் சியாம் செல்வன் மீது காதல் ஏற்படுகிறது. இதனை தனது தாத்தாவான பாரதிராஜாவிடம் கூறுகிறார் ரக்சனா. இன்னொரு பக்கம் ரக்சனாவுக்கு மாமாவாக வரும் சுசீந்திரனோ சாதி வெறி பிடித்தவர். கடைசியில் சுசீந்திரனுக்கு இருக்கும் சாதி வெறி அவரை என்ன செய்ய வைக்கிறது, இதனை எப்படி சமாளிக்கிறார் ரக்சனா என்பது தான் படத்தின் மீதி கதை.

மார்கழி திங்கள் படத்தின் மூலம் புது முகங்கங்களாக அறிமுகம் ஆகும் சியாம் செல்வன், ரக்சனா, நக்ஷா சரண் தங்களது நடிப்பை அருமையாக வெளிபடுத்தியுள்ளனர். பாரதிராஜாவும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை பக்காவாக நடித்துள்ளார். இளையராஜாவின் இசையும் படத்திற்கு பக்கபலமாக இருந்திருக்கிறது. கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு என மனோஜ் பாரதிராஜாவுக்கு கைக்கொடுத்திருக்கிறார்.

மனோஜ் பாரதிராஜா

பாரதிராஜா இயக்கிய ‘தாஜ்மஹால்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் மனோஜ் பாரதிராஜா. அதனைத் தொடர்ந்து ‘அல்லி அர்ஜுனா’, ‘வருஷமெல்லாம் வசந்தம்’, ‘ஈரநிலம்’, ‘சமுத்திரம்’, ‘அன்னக்கொடி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ‘மாநாடு’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இன்னும் சொல்ல போனால் மனோஜூக்கு இயக்குநராக வேண்டும் என்று தான் ஆசை. ஆனால் தனது தந்தை பாரதிராஜாவுக்கு தான் ஒரு நடிகராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அது முடியாமல் போனது.

இதனால் இந்த ஆசையை தனது மகன் மீது திணிக்க முயற்சித்தார். ஆனால், மகனுக்கோ இயக்குநர் ஆக ஆசை இருந்தது. கடைசியில் இந்த போராட்டத்தில் ஒரு சில கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் மனோஜ், இருந்தாலும் பெரிதாக வொர்க் அவுட் ஆகவில்லை. மார்கழி திங்கள் மூலம், ஒரு வழியாக பல ஆண்டுகளுக்கு பிறகு அவருடைய ஆசை நிறைவேறி இருக்கிறது.

பாரதிராஜா & இளையராஜா

கடந்த 1992-ம் ஆண்டு ”நாடோடி தென்றல்” என்ற படத்தில் இயக்குநர் பாரதிராஜா மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூட்டணி ஒன்றாக பணியாற்றியது. அதன்பின் சிறிய கருத்து வேறுபாட்டால் அந்த கூட்டணி உடைந்து போனது. பின்னர் கடந்த 2008-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய ”தெக்கத்தி பொண்ணு” என்ற டிவி சீரியலின் டைட்டில் பாடலுக்கு மட்டும் இளையராஜா இசையமைத்திருந்தார். கிட்டத்தட்ட 31 ஆண்டுகளுக்கு பிறகு திரைப்படத்துக்காக இவர்கள் இருவரும் கூட்டணி அமைத்திருக்கின்றனர்.

சுசீந்திரன்

‘மார்கழி திங்கள்’ படத்தை இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பாரதிராஜா & இளையராஜாவை இணைத்த பெருமையும், மனோஜ் பாரதிராஜாவை இயக்குநராக அறிமுகம் செய்து வைத்த பெருமையும் இப்படத்தின் தயாரிப்பாளர் சுசீந்திரனையே சேரும்.

படம் பற்றிய அலசல்

திரைக்கதை வல வல வென்று இல்லாமல் சீரான flow-வில் போகிறது. தன் அப்பா போலவே கிரமத்தை மையமாக வைத்து இயக்கி இருக்கிறார் மனோஜ். சுசீந்திரனின் வில்லத்தனம் படத்தில் பக்கா பொருத்தம். படம் முடிந்த பிறகும் இப்படத்தில் உள்ள பாடல்கள் நம்மை முனுமுனுக்க வைக்கிறது. இரண்டு இயக்குநர்களை மனோஜ் இயக்கி இருக்கிறார். மொத்தத்தில் சாதிய வெறிக்கு வன்மமான தண்டனை கொடுக்கும் படம். என்ன தண்டனை என்று திரையில் பாருங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.