குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தங்கர் அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜஸ்தான் மாநில முன்னாள் ஆளுநருமான மார்கரெட் ஆல்வா (80 வயது) அறிவிக்கப்பட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இவரை தேர்வு செய்வதற்கான முடிவு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தலைமையில் நேற்று நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜுன கார்கே, ஜெய்ராம் ரமேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி, திமுகவின் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
யார் இந்த மார்கரெட் ஆல்வா
மார்கரெட் ஆல்வா, கர்நாடக மாநிலம், மங்களூரில் 1942ஆம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி பிறந்தார். பெங்களூரு சட்டக் கல்லூரியில் படித்தார். தன்னுடன் சட்டக் கல்லூரியில் படித்தவரான நிரஞ்சன் தாமஸ் ஆல்வாவை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும் 3 மகள்களும் உள்ளனர்.
முன்னாள் பிரதமர்கள் இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ் ஆகியோர் அரசியல் அமைச்சராக பதவி வகித்திருக்கிறார். உத்தரகாண்ட் மாநில ஆளுநராகவும் இவர் பதவி வகித்த அனுபவம் கொண்டவர் ஆவார்.
நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய அரசியல் சாசன பதவியாகக் கருதப்படுகிறது குடியரசு துணை தலைவர் பதவி. அந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மாநிலங்களவையின் தலைவராகவும் இருப்பார்கள்.
தற்போது குடியரசு துணைத் தலைவராக உள்ள வெங்கைய்யா நாயுடுவின் பதவிக்காலம் அடுத்த மாதம் 10ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய குடியரசு துணை தலைவரைத் தேர்ந்தெடுக்க ஆகஸ்ட் 6ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் 19ந்தேதி கடைசி நாளாகும்.