சென்னையில் உள்ள நீட் கவுன்சிலிங் மையத்திற்கு வந்த அழைப்பை எடுத்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தைரியமாக இருங்கள் என்றும் நல்ல ரிசல்ட் வரும் என்றும் அறிவுரை வழங்கினார்.
சென்னை தேனாம்பேட்டை டி. எம்.எஸ். வளாகத்தில் உள்ள 104 மருத்துவ சேவை உதவி மையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அரசு மூலம் மனநல ஆலோசகர்களைக் கொண்டு நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கும் பணிகளையும் அவர் பார்வையிட்டார்.
அப்போது, கவுன்சிலிங் மையத்திற்கு வந்த தொலைபேசி அழைப்பை எடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார். அவருடன் மறுமுனையில், நீட் தேர்வு எழுதிய மாணவர் ஒருவர் பேசினார். அப்போது, தைரியமாக இருங்கள் என்றும் நல்ல ரிசல்ட் வரும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். மருத்துவப்படிப்பில் 7.5 இட ஒதுக்கீடு இந்த வருடமும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், தொலைபேசியில் மறுமுனையில் பேசிய மாணவருக்கு ஆறுதல் கூறினார். மேலும் நீட் தேர்வு விலக்குக்கான முயற்சி தொடரும் என அந்த மாணவரின் பெற்றோருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் நேற்றைய தினம் நீட் தேர்வு எழுதப்பட்டு இருக்கிறது என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கவுன்சிலிங் மூலம், அவர்கள் மன நிலையை உறுதி படுத்திட வேண்டும் என மன நல ஆலோசகர்கள் கொண்டு அறிவுறுத்தும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது என்றும் கூறினார்.
1,42,786 மாணவர்களுக்கு நீட் தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது. அவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டு வருகிறது. 17,000-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு நிதி உதவி பெரும் மாணவர்களின் பட்டியல் பெறப்பட்டு அவர்களுக்கான ஆலோசனையை தொடங்கி உள்ளோம். 7.5 சதவிகித இட ஒதுக்கீடு 555 மாணவர்களுக்கு கடந்த ஆண்டு வாய்ப்பு வழங்கப்பட்டது. அது இந்த ஆண்டும் தொடங்கப்பட உள்ளது.

இருப்பினும் இந்த 1,42,786 மாணவர்களுக்கு அவர்களது மன நலத்தை கவுன்சிலிங் மூலம் சீர் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் நீட் விலக்கு குறித்து இந்த அரசு ஒரே மன நிலையில் தான் இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். Happy streets இல் மருத்துவ முகாம்கள் அமல்படுத்துவது குறித்து சென்னை மேயரை ஆய்வு செய்ய அறிவுறுத்தி உள்ளோம். காலை 6 மணி முதல் 9 மணி வரை அந்த மருத்துவ முகாம்கள் இயங்கும்.
குரங்கம்மை நோய் தடுப்புக்காக, தமிழகத்தில் உள்ள 6 பன்னாட்டு விமானங்களில் கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. மொத்தமாக வரும் பயணிகளில் 2 சதவிகிதம் பேருக்கு அறிகுறிகள் இருக்கிறதா என நேரடியாக சுகாதார துரை சார்பில் முகாம்கள் அமைக்க பட்டுள்ளது. இன்று மாலை நான் கோவை விமான நிலையத்தில், குரங்கம்மை நோய் கண்காணிப்பு முகாம்களை ஆய்வு மேற்கொள்ள உள்ளேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உடல்நிலை நன்றாக உள்ளது, மேலும் அவர் இன்று காலை 10 மணிக்கு குடியரசு தலைவர் வேட்பாளருக்கு வாக்களிக்க உள்ளார் என அமைச்சர் தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்







