விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் முத்துமாணீக்கம் என்பவருக்கு சொந்தமான வனஜா பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த பட்டாசு ஆலையில் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில், பட்டாசு தயாரிப்பின்போது ஏற்பட்ட உராய்வு காரணமாக பட்டாசுகள் வெடித்து விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த சிவகாசி, சாத்தூர், விருதுநகர் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும், இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்திருந்தனர். மேலும் பட்டாசு ஆலையில் உள்ள 4 அறைகள் முற்றிலும் சேதமடைந்தன.
பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வெடி மருந்துகள் பயங்கர சப்தத்துடன் வெடித்ததாகவும், 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு அதிர்வு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. பட்டாசு ஆலை விபத்தில் 19 பேர் உயிரிழந்த நிலையில், எஸ்.பி. ஸ்ரீநாதா சம்பவ இடத்தை ஆய்வு செய்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலர் உயிரிழந்துள்ள துயரச் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
மீட்புப் பணிகளை விரைவுபடுத்திக் கண்காணிக்கவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறவும் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரையுமாறு மாண்புமிகு அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோரைக் கேட்டுக்கொண்டுள்ளேன்.
இதுகுறித்து அறிந்ததுமே மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டு, தேவைப்படும் அனைத்து உதவிகளையும் ஒருங்கிணைக்க அறிவுறுத்தியுள்ளேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







