மணிப்பூர் சம்பவத்தைக் கண்டித்து கனிமொழி தலைமையில் நாளை மறுநாள் திமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்!

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசைக் கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் ஜூலை 23-ம் தேதி, கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து…

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசைக் கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் ஜூலை 23-ம் தேதி, கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

”பாஜக ஆட்சி நடத்தும் மணிப்பூர் மாநிலத்தில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டு பல உயிர்கள் பலியாகின. அந்த மாநிலத்தை ஆளும் பாஜக அரசு கலவரத்தைக் கட்டுப்படுத்த தவறிய நிலையில், சமீபத்தில் பெண்கள் இருவர் நிர்வாணப்படுத்தப்பட்டு வீதியில் ஊர்வலமாக இழுத்துச் சென்று கற்பழிக்கப்பட்ட, மனிதாபிமானமற்ற கொடுமை நிகழ்ந்ததாக, ஊடகச் செய்திகள் வெளிவந்து அனைவரின் உள்ளத்தையும் பதற வைத்துள்ளது.

தாய்மையை அவமானப்படுத்தும் இந்நிகழ்வுகளை மணிப்பூர் மாநில பாஜக அரசு தடுக்கத் தவறி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. இக்கலவரங்கள் நிகழ்ந்த நேரத்தில் அதனைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு வந்தார். மத்திய பாஜக அரசும் மகளிருக்கெதிரான இக்கொடுமைகளைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியது.

மணிப்பூர் கலவரம் தொடங்கிய நேரத்திலேயே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது கண்டனத்தையும், கவலையையும் சமூக ஊடக வாயிலாக வெளிப்படுத்தினார். இச்சூழ்நிலையில் பெண்களுக்கு எதிரான நெஞ்சைப் பதற வைக்கும் இக்கொடுமையைக் கண்டித்து, வரும் ஜூலை 23-ம் தேதி அன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மாலை 4 மணியளவில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, எம்.பி. தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

தொடர்ச்சியாக ஜூலை 24-ம் தேதி காலை 10.00 மணியளவில் தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.