மணிப்பூர் வன்முறை தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்களின் ஒன்றான மணிப்பூரில் நாகா, குக்கி மற்றும் மைதேயி இனங்கள் வசித்து வருகின்றன. இவர்களில் நாகா மற்றும் குக்கி இன மக்கள் பழங்குடி பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் மணிப்பூர் உயர்நீதிமன்றம் மேதேயி மக்களுக்கு பழங்குடி பட்டியலில் சேர்ப்பதற்கான பரிந்துரைகள் குறித்து விரிவான அறிக்கையை மத்திய அரசுக்கு நான்கு வாரங்களுக்குள் அனுப்புமாறு கேட்டுக் கொண்டது.
மைதேயி மக்களை பழங்குடியின பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. மணிப்பூர் மாநில அனைத்து பழங்குடி மாணவர் சங்கம் சார்பில் கடந்த மே 3ம் தேதி பேரணிக்கு ஏற்பாடு செய்தனர். இந்த பேரணியில் நாகா இன மக்களும், குக்கி இன மக்களும் திரளாக பங்கெடுத்துக் கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மைதேயி இன மக்களும் பேரணி நடத்தினர். இந்த பேரணிக்கு பின்பு மணிப்பூர் முழுவதும் கலவரம் வெடித்து படிப்படியாக வன்முறையாக மாறியது.
கடந்த மே 4ம்தேதி மணிப்பூரில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த காணொலி இணையத்தில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து பல்வேறு கருத்துகளை தெரிவித்ததோடு மணிப்பூர் அரசு மற்றும் மத்திய அரசு இந்த விவகாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்தது.
இவ்விவகாரம் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுவதாகவும் வழக்கின் விசாரணையை மணிப்பூர் மாநிலத்திலிருந்து வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரி மத்திய அரசு கோரியிருந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வர இருந்தது. ஆனால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உடல் நலம் சரியில்லாத காரணமாக அன்றைய தினம் விசாரணை நடைபெறவில்லை.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதற்கிடையில் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட இரு பெண்கள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று காலை மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து வெளிப்படையான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனவும், தங்களது அடையாளங்களை வெளியிடாமல் பாதுகாக்க உத்தரவிட கோரியும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்த வழக்கை உண்மையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வது என்பதை மிகவும் கடினமானது. ஏனென்றால் இதன்மூலம் ஒரு குறிப்பிட்ட சமுதாயம் இன்னொரு சமுதாயத்தின் மீது குறை சொல்வார்கள். இது தொடர்ந்து நடக்கக் கூடியதாகவே மாறிவிடும். சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கூறி தொடரப்பட்ட ஒரு பொதுநல மனுவிலேயே பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதை ஏற்க முடியாது. ஏனெனில் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக மனு தாக்கல் செய்யப்பட வேண்டும்.
மணிப்பூர் வன்முறை விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனு ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களை தீவிரவாதிகள் போல உருவகப்படுத்தும் வகையில் உள்ளது அதனை தங்களால் ஏற்க முடியாது எனவும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.
மணிப்பூர் மாநிலத்தில் போதைப்பொருள் தயாரிப்பு மற்றும் சட்டவிரோத குடியேற்றம் உள்ளிட்டவற்றை தடுக்க கோரியும், மணிப்பூர் வன்முறை விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை அமைக்க கோரியும் தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஒரு பொதுநல மனுவிலேயே பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதை ஏற்க முடியாது, ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும் எனவே இந்த மனுவை தொடர்ந்து விசாரிக்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்வதாக தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.







