நாட்டையே உலுக்கிய மணிப்பூர் வீடியோ தொடர்பான வழக்கு விசாரணையை ஏற்றுக்கொண்ட சிபிஐ அதுதொடர்பாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது.
மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனா். இதற்கு குகி மற்றும் நாகா பழங்குடியினா் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக நடைபெற்ற போராட்டத்தில் போது வன்முறை வெடித்தது. இதனைத்தொடர்ந்து அங்கு தொடர்ந்து கலவரம் நடைபெற்று வருகிறது.
இதையடுத்து, ராணுவம் மற்றும் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையைச் சோ்ந்த 10,000 வீரர்கள் குவிக்கப்பட்டனர். எனினும், வன்முறை சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன.
இதனிடையே இரு பெண்களை வன்முறை கும்பல் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ வெளியாகி பெரும் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக்கோரியும், பிரதமர் பதில் அளிக்க வலியுறுத்தியும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் முடங்கியுள்ளது.
இந்நிலையில், மணிப்பூர் வீடியோ விவகாரம் தொடர்பான விசாரணையை மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) இன்று முறைப்படி ஏற்றுக்கொண்டது. இந்த வழக்கில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மணிப்பூர் வீடியோ தொடர்பான விசாரணையை மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) ஏற்கும் என்று உள்துறை அமைச்சகம் வியாழக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.







