மணிப்பூர் வீடியோ விவகாரம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பெண் வழக்கறிஞர்கள் மனு!

மணிப்பூர் கலவரத்தால் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்பட்ட பெண்களை சந்தித்து உளவியல் மற்றும் மறுவாழ்வு அளிக்கும் வகையில், பெண் வழக்கறிஞர்கள் குழுவை அமைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கறிஞர் சீனி சையத் அம்மா,…

மணிப்பூர் கலவரத்தால் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்பட்ட பெண்களை சந்தித்து உளவியல் மற்றும் மறுவாழ்வு அளிக்கும் வகையில், பெண் வழக்கறிஞர்கள் குழுவை அமைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கறிஞர் சீனி சையத் அம்மா, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மனு அனுப்பி உள்ளார்.

அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது:

மணிப்பூர் மாநிலத்தில் நடந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் எந்த மனித கண்ணியமும் இல்லாமல் நடத்தப்பட்டனர். மணிப்பூர் கலவரத்தின் போது பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பான சமூக வலைதளங்களில் பரவும் காணொலிகள் பெண்கள் மட்டுமின்றி அனைத்து நாகரீக மனிதர்களின் ரத்தத்தை உறைய வைக்கிறது. மணிப்பூர் கலவரத்தால் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

உதாரணமாக சிலர் வேலையில் தொடர முடியாத அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.எனவே, பாதிக்கப்பட்ட பெண்களை அவர்கள் அனுபவித்த மன வேதனையிலிருந்து வெளிவர உதவுவதற்காக, சென்னை உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர்கள் குழுவை அமைத்து அவர்களைச் சந்திக்க அனுமதிக்க வேண்டும்.

மணிப்பூர் பெண்களுக்கு ஏற்பட்ட உடல் ரீதியாக, மன ரீதியாக ஏற்பட்ட காயங்களை குணப்படுத்த வேண்டும். பாதிக்கப் பட்டவர்களுக்கான இழப்பீடு வழங்க வேண்டும். மணிப்பூரில் கலவரத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறையில் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தலா ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும்.

மணிப்பூரில் கலவரத்தால் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடனடி இலவச சட்ட உதவிகளை வழங்க வேண்டும்.  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 32-வது பிரிவின் கீழ் இதை ஒரு ரிட் மனுவாகக் கருதி விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு வழக்கறிஞர் சீனி சையத் அம்மா கேட்டுக் கொண்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.