குஜராத்தை போல தற்போது மணிப்பூரில் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக என மக்களையில் திமுக எம்பி டிஆர் பாலு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதலே இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள், மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் கோஷத்துக்கு ஆளுங்கட்சியும் பதில் கோஷம் எழுப்பி வருகின்றன. இதனால், அவையில் பெரும் கூச்சல் குழப்பம் நிலவி வருகிறது.
இந்த கூட்டத்தொடரில் 32 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு இருந்தது. ஆனால் மணிப்பூர் வன்முறை சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வலியுறுத்தி, எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன. பிரதமர் மோடி பதிலளிக்காத நிலையில், பாஜக அரசுக்கு எதிராக, மக்களவையில் ஜூலை 26 ஆம் தேதி, காங்கிரஸ் கட்சி நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் வழங்கியது.
இத்தீர்மானத்திற்கு இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இந்த நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. நாடாளுமன்றத்திற்கு மீண்டும் திரும்பியுள்ள ராகுல்காந்தி , எதிர்க்கட்சிகள் சார்பில் உரை நிகழ்த்துவார் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழிந்த காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகாய் விவாதத்தினை துவக்கி வைத்து உரையாற்றினார். அவர் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மூன்று முக்கிய கேள்விகளை எழுப்பினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டிஆர்பாலு பேசியதாவது….
- தமிழ்நாட்டிற்கு பிரதமர் எதுவும் செய்யவில்லை . தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடத்தி வருகிறது.
- பிரதமர் நரேந்திரமோடி எங்கு சென்றாலும் திருக்குறள், திருவள்ளுவர் பற்றி பேசுகிறார்; ஆனால் தமிழ்நாட்டிற்கு பிரதமர் எதுவும் செய்யவில்லை

- நாடாளுமன்றத்துக்கு பிரதமர் நரேந்திர மோடியை வர வைக்க வேறு வழி இல்லாததால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளோம்.
- கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு ஏன் குறைக்கவில்லை?
- 160 ஆண்டு கனவுத் திட்டமான சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை பாஜக அரசு கிடப்பில் போட்டது ஏன்? காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால் நிறைவேற்றப்படாமல் உள்ளது. சங் பரிவார் எதிர்ப்பால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
- ரூ.15 லட்சம் கோடிக்கு பட்ஜெட் போடும் மத்திய அரசால், பிரதமர் அடிக்கல் நாட்டிய மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.2,000 கோடி ஒதுக்க முடியவில்லை.
- இலங்கையில் 13-வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
- ரூ.15 லட்சம் அனைவருக்கும் வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்தனர். ஆனால். இதுவரை ரூ.15 கூட தரவில்லை.
- பெரும்பான்மை மக்களை வைத்து சிறுபான்மையின மக்களின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. முன்பு குஜராத்தில் நடந்தது போல இப்போது மணிப்பூரில் நடக்கிறது. இவ்வாறு டி.ஆர்.பாலு பேசினார்.







