பொறுப்புகளை செய்ய மணிப்பூர் போலீசாருக்கு தகுதி இல்லையா? அல்லது ஆர்வமில்லையா? என சாரமாரி கேள்விகளை முன்வைத்துள்ள உச்சநீதிமன்றம் அம்மாநில டிஜிபியை நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளது.
மணிப்பூர் வன்முறை தொடர்பான வழக்கின் விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் நடைபெற்றது.அப்போது, மணிப்பூர் வன்முறை சம்பவத்தில் மத்திய, மாநில அரசுகள் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கடும் அதிருப்தி தெரிவித்தார். மணிப்பூரில் இரண்டு மாதங்களாக வன்முறை நடக்கிறது, ஒரு FIR கூட பதிய முடியவில்லையா? என்று கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், அரசியலமைப்பு முடங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
6000-க்கும் அதிகமான FIR பதிவு செய்யப்பட்ட நிலையில், 50 மட்டும் சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது என்றால் மற்றவை நிலை என்ன? என்று கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, பொறுப்புகளை செய்ய மணிப்பூர் போலீசாருக்கு தகுதி இல்லையா? அல்லது ஆர்வமில்லையா? என்று கேட்டார்.
அப்போது வாதிட்ட மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், மணிப்பூர் வன்முறை என்பது பல பிரச்னைகளையும், விவகாரங்களையும் உள்ளடக்கியது என்றும், மணிப்பூர் விவகாரத்தில் நீதிமன்றம் முடிவு செய்வது என்பது மிகவும் கடினம் என்றும் குறிப்பிட்டார். மணிப்பூர் விவகாரத்தை எவ்வாறு அணுகுவது என்பது அரசுக்குதான் தெரியும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது, FIR-ல் பெயர் எங்கே, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சம்பந்தப்பட்ட நபர்கள் மீதான நடவடிக்கை என்ன என்பதை நீதிமன்றம் கேட்க முடியும் என்று குறிப்பிட்டனர். இதையடுத்து, வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்த தலைமை நீதிபதி அமர்வு, திங்கட்கிழமையன்று மணிப்பூர் டிஜிபி நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.







