”காவல்துறையினரை தாக்க முற்பட்டதால் தற்காப்புக்காக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது” – கூடுவாஞ்சேரி துப்பாக்கிசூடு குறித்து டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பேட்டி!

கூடுவாஞ்சேரியில் காவல்துறையினரை தாக்க முற்பட்டதால் தற்காப்புக்காக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என டி.ஜி.பி. சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.  தாம்பரம் மாநகர காவல், கூடுவாஞ்சேரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காரணை புதுச்சேரி அருங்கல் சாலையில் இன்று…

கூடுவாஞ்சேரியில் காவல்துறையினரை தாக்க முற்பட்டதால் தற்காப்புக்காக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என டி.ஜி.பி. சங்கர் ஜிவால் கூறியுள்ளார். 

தாம்பரம் மாநகர காவல், கூடுவாஞ்சேரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காரணை புதுச்சேரி அருங்கல் சாலையில் இன்று அதிகாலை 03.30 மணியளவில் காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் மற்றும் காவலர்கள் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த கருப்பு நிற காரை நிறுத்த முற்பட்ட போது, காரை நிறுத்தாமல் உதவி ஆய்வாளரை இடிப்பது போல் வந்து போலிஸ் ஜீப் மீது மோதி கார் நின்றது.

காரின் அருகில் சென்ற போது அதில் இருந்து நான்கு நபர்கள் ஆயுதங்களுடன் காரை விட்டு இறங்கி போலிசாரை நோக்கி தாக்க முற்பட்டனர். அதில் ஒருவர் அருவாளால் உதவி ஆய்வாளரின் இடது கையில் வெட்டி மீண்டும் தலையில் வெட்ட முற்பட்ட போது உதவி ஆய்வாளர் கீழே குனிந்ததால் அவரது தொப்பியில் வெட்டுபட்டது. இதை பார்த்த காவல் ஆய்வாளர் ஒரு நபரையும் உதவி ஆய்வாளர் ஒரு நபரையும் சுட்டனர். மீதி இருவர் அங்கிருந்த ஆயுதங்களுடன் தப்பி ஓடினார்கள்.

இதில் உயிரிழந்த வினோத் (எ) சோட்டா வினோத் (35) ஓட்டேரி காவல் நிலைய சரித்திர பதிவேடு (A+ Category, HS.No.04/15) குற்றவாளி எனவும், அவர் மீது 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அதில் 10 கொலை, 15 கொலை முயற்சி, 10 கூட்டுக்கொள்ளை, 15 அடிதடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

மேலும் மற்றொரு நபர் பெயர் ரமேஸ் (32) ஓட்டேரி காவல் நிலைய சரித்திர பதிவேடு (A Category, HS.No.18/20) குற்றவாளி எனவும், அவர் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அதில் 5 கொலை, 7 கொலை முயற்சி, 8 அடிதடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

தப்பியோடிய குற்றவாளிகள் தாங்கள் பயன்படுத்திய இரண்டு செல்போன்களை, காரிலேயே விட்டு சென்றனர். இதனையடுத்து அதனை தடவியல் நிபுணர்கள் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில் தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் குரோம்பேட்டை மருத்துவமனையில் ரவுடிகளால் வெட்டப்பட்டு சிகிச்சை பெற்று வரும் உதவி ஆய்வாளரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதனைத் தொடர்ந்து காவல் ஆணையர் அமல் ராஜ்  என்கவுன்ட்டர் சம்பவம் நடைபெற்ற இடத்தில் நேரடி ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்கள் மத்தியில் பேசியதாவது..

” துப்பாக்கி சூடு தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளேன். குற்றவாளிகள் இரண்டு பேர் சுடப்பட்டு இருக்கிறார்கள். தப்பி சென்ற இருவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது. மிக விரைவாக அவர்களும் கைது செய்யப்படுவார்கள் “ என தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவல் உதவி ஆய்வாளர் சிவ குருநாதனை டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவல்துறையினரை தாக்க முற்பட்டதால் தற்காப்புக்காக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக கூறினார். தாக்குதலுக்கு ஆளான உதவி ஆய்வாளர் நலமுடன் இருப்பதாக கூறிய அவர், என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் மீது பல்வேறு வழக்குகள் இருந்ததாகவும் தெரிவித்தார். அதோடு தப்பிச்சென்ற இருவர்கள் மீதும் கொலை வழக்குகள் நிலவையில் இருப்பதாகவும், அவர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அதோடு ரவுடிகளை ஒடுக்கும் நடவடிக்கை தொடரும் எனவும் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.