”மணிப்பூர் விவகாரம் : நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயார்” – உள்துறை அமைச்சர் அமித்ஷா

”மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயார்” என  உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மணிப்பூர் கலவரத்தில் 2 பழங்குடி பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்தும் அங்கு…

”மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயார்” என  உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் கலவரத்தில் 2 பழங்குடி பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்தும் அங்கு நடைபெற்று வரும் கலவரம் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.

இதுதொடர்பாக விவாதிக்க கோரியும், நாடாளுமன்றத்தின் அவையில் பிரதமர் பதில் அளிக்க வலியுறுத்தியும், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் ஒத்தி வைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்தன. திமுக சார்பில் மாநிலங்களவையில் திருச்சி சிவாவும், மக்களவையில், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் நோட்டீஸ் அளித்தனர். காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர் எம்பி ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் அளித்தார்.

இந்நிலையில் மக்களவை இன்று கூடியதும் மணிப்பூர் விவகாரத்தை மீண்டும் எதிர்கட்சிகள் எழுப்பின. இதனால் அவையில் கூச்சலும் குழப்பமும் நிலவியது . இதனையடுத்து அவை நண்பகல்  முதலில் 12 மணி வரையும் பின்னர்  பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல் மாநிலங்களவையிலும் எதிர்கட்சிகள் இதே பிரச்னையை கிளப்பியதால் முதலில் நண்பகல் 12 மணி வரையும் பின்னர் பிற்பகல் 2 மணி வரையும்  அவை ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக மாநிலங்களை தலைவர் ஜகதீப் தன்கர் அறிவித்தார்.

இந்த நிலையில் பிற்பகலுக்கு பிறகு தொடர் அமளி நீடித்ததால் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது. தொடர் நாடாளுமன்ற முடக்கம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளதாவது..

“ மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த தயாராக இருக்கிறேன். இந்த விவகாரத்தில் விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் அனுமதிக்க வேண்டும்; மணிப்பூர் விவகாரத்தில் நாடு உண்மையை அறிந்து கொள்வது அவசியம் ” என  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.