இலங்கையை சேர்ந்த பிரபல இயக்குநரான பிரசன்ன விதானகே இயக்கியுள்ள ‘பேரடைஸ்’ திரைப்படத்தை இயக்குநர் மணிரத்னம் தனது நிறுவனத்தின் மூலம் திரையரங்குகளுக்கு கொண்டு வருகிறார்.
இலங்கையில் விமர்சனரீதியில் பெரும் வரவேற்பை பெறக்கூடிய படங்களை எடுத்து வருபவர் இயக்குநர் பிரசன்ன விதானகே. தமிழருக்கும், சிங்களருக்கும் இடையே நடந்த பிரச்னைகளை நடுநிலையாக அணுகி அவர் எடுத்த ‘டெத் ஆன் எ ஃபுல் மூன் டே’ திரைப்படம், போரைக் கையிலெடுக்கும் நாடுகளின் மனசாட்சியை உலுக்கக்கூடிய ஒன்றாக அமைந்தது.
இனப்பிரச்னை தீவிரமாக இருந்த 1997-ம் ஆண்டில் வெளிவந்த இத்திரைப்படம் ஒரு ராணுவ வீரரின் மரணத்தின் மூலம் இலங்கை ராணுவத்தை துணிந்து விமர்சித்தது. தற்போது அவர் எழுதி இயக்கியிருக்கும் பேரடைஸ் படத்தினை நியூட்டன் சினிமா என்ற தமிழ்ப்படத் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. அப்படத்தைப் பார்த்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் மணிரத்னம் அவரது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் மூலமாக அதை திரையரங்குகளுக்கு கொண்டு வருகிறார்.
போருக்குப் பிறகு பொருளாதார வீழ்ச்சியால் தள்ளாடும் இலங்கைக்கு சுற்றுலா வரும் ஒரு தம்பதியைப் பற்றிய கதை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ரோஷன் மேத்யூ, தர்ஷனா, ஷியாம் பெர்ணாண்டோ உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் தென்கொரியாவின் புகழ் பெற்ற பூஸன் திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான கிம் ஜிஜோக் விருது வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.







