சென்னைக்கு தென்கிழக்கே 210 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் தற்போது மாமல்லபுரத்திற்கு தென் கிழக்கே 180 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 210 கி.மீ தொலைவிலும் உள்ளது. கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 10 கி.மீ வேகத்தில் வடமேற்கு திசையில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருகிறது. இந்த புயல் வடமேற்கு திசையில் மேலும் நகர்ந்து இன்று இரவு புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதியில், புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்க வாய்ப்புளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையை கடக்கும்போது, மணிக்கு 65லிருந்து 75 கி.மீ வேகம் வரை பலத்த காற்று வீசும் என்றும் அதிகபட்சமாக மணிக்கு 85 கி.மீ வேகம் வரை காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




