மாண்டஸ் புயல் கரையை கடப்பது மேலும் 2 மணி நேரம் நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அதிகாலை சுமார் 1.50 மணி அளவில் வெளியிட்டுள்ள டிவிட்டர் தகவலில் மாண்டஸ் புயல் மாமல்லபுரத்திற்கு மிகவும் அருகே உள்ளதாக தெரிவித்துள்ளது. கரையை கடக்கு நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று கொண்டிருப்பதாகவும், அடுத்த 2 மணி நேரத்திற்குள் இது நிறைவடையும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன், கரையை கடந்தபின் முதலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாண்டஸ் வலுவிழக்கும் என தெரிவித்தார்.
மாண்டஸ் புயல் எதிரொலியாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பாக்கத்தில் அதிகபட்சமாக 142 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக அவர் கூறினார். சென்னை மீனம்பாக்கத்தில் 103 மில்லி மீட்டர் மழையும், திருவள்ளூரில் 83 மில்லி மீட்டர், மாதவரம் 87 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக பாலச்சந்திரன் கூறினார். மாண்டஸ் புயலால் அதிகபட்சமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் மணிக்கு 70 கி.மீ வேகத்தில் காற்று வீசியது பதிவாகியுள்ளதாகவும் தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் கூறினார்.







