மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் மண்டகப்படி முறை பின்பற்ற வேண்டும் என்றும், அந்த முறையை நாடார்களுக்கு வழங்க வேண்டும் என்றும் பால பிரஜாபதி அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், சுவாமி தோப்பு அன்புவனத்தில் பால பிரஜாபதி அடிகளார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் பாரம்பரிய திருவிழாவினை தமிழரின் பாரம்பரிய முறைப்படி நடத்த வேண்டும். நாடார்களுக்கு குலதெய்வமாக விளங்கும் அம்மனுக்கு முழுக்க முழுக்க ஆரிய ஆதிக்க முறைப்படி முறைகளை முன்னெடுப்பது ஏற்புடையதல்ல.
ஆதிக்கம் செலுத்திய திருவிதாங்கூர் மனுதர்ம வழி அரசு கோயிலை கையகப்படுத்திய
பின்னர் தான் தமிழ் மரபு முற்றிலும் அகற்றப்பட்டது. திருத்தமிழர் போராட்டம் நடத்தி தமிழ் மரபுக்காக தியாகங்கள் பல செய்து தாய் தமிழகத்துடன் குமரி மாவட்ட பகுதி இணைக்கப்பட்டது. அதன் பின் கோயில்கள் தமிழக அரசின் இந்து அறநிலையத் துறையுடன் இணைக்கப்பட்டது. ஆனால், கோயிலின் நடைமுறை ஆரிய மனுதர்ம ஆதிக்கத்தின் அடிப்படையிலேயே நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் குமரி மாவட்டம் தவிர பிறபகுதிகளில் அனைத்து கோயில்களிலும்
மண்டகப்படி முறை நடைமுறையில் உள்ளது. திருச்செந்தூர் கோயில், பாபநாசம் கோயில், தென்காசி கோயில் போன்ற அனைத்து கோயில்களிலும் நடக்கும் விழாக்களை மண்டகப்படி கட்டளைகாரர்களே காலங்காலமாக நடத்தி வருகிறார்கள். அங்கெல்லாம் ஒருநாள் திருவிழா நடத்தும் உரிமை நாடார் சமூகத்திற்கான மண்டகப்படிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, மண்டைக்காட்டிலும் பண்டைய முறை பின்பற்ற வேண்டும். நாடார்களுக்கு மண்டைக்காடு கோயிலில் மண்டகப்படி வழங்கப்பட வேண்டும். முதல்நாள் கொடிக்கயிறு கொடுக்கும் மரபினை தொடர்ந்து ஒன்றாம் திருவிழா மண்டகப்படியினை நாடார் சமூகத்திற்கு தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும். பிற சமூகங்களுக்கும் உரிய மண்டகப்படிகளை வழங்க வேண்டும்.
முதல் நாள் திருவிழாவை உலகம் வியக்கும் வண்ணம் தான தர்மங்கள், மலர்
அலங்காரங்கள், சிறப்பு நாதஸ்வர கச்சேரிகள், தமிழிசை நிகழ்ச்சிகள், வாணவேடிக்கையுடன் கொண்டாடத் தயாராக உள்ளனர். எனவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
-ம.பவித்ரா








