மழை நீர் செல்வதற்கு கால்வாய் ஏற்படுத்தி தருமாறு பல வருடங்களாக கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மணலி புதூர் பகுதி மக்கள் தெரிவித்துள் ளனர்.
கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக, சென்னையில் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழைநீர் இன்னும் வடியாமல் இருக்கிறது. இதன் காரணமாக பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் “தண்ணீர் தேங்கியதற்கு காரணம் என்ன, தேங்காமல் இருக்க என்ன தீர்வு?” என நியூஸ் 7 தமிழ், இன்று தொடர் நேரலையை வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து அரசு கவனத்திற்கு கொண்டு செல்கிறது.
மணலி புதூரில் உள்ள 52 வது பிளாக்கில், நமது செய்தியாளர் சென்றபோது அந்தப் பகுதியினர் கூறியதாவது: இங்க ஐந்தடி வரை மழை நீர் தேங்கியிருக்கு. இங்க மழை நீர் வடிகால் வசதி சரியா செய்யப்படலை. அதனாலதான் இங்க தண்ணீர் தேங்கியிருக்குது. தண்ணீர் போறதுக்கு வழியே இல்லாம இருக்கு. ஒவ்வொரு மழை காலத்துலயும் நாங்க இந்த துன்பத்தை அனுபவிச்சுட்டுதான் இருக்கோம். இந்த முறை மழை அதிகம்ங்கறதால, வீட்டுக்குள்ளயே தண்ணீர் வந்துட்டு.
இடுப்பளவு தண்ணீர் வீட்டுக்குள்ள இருக்கு. அதனால பல வீடுகள்ல இருந்தவங்க வேறு பகுதிக்கு போயிட்டாங்க. பல வருஷமாக இதற்கு தீர்வு பண்ணுங்கன்னு கேட்டுக்கொண்டே இருக்கோம். பண்ணிட்டோம் பண்ணிட்டோம்னு சொல்றாங்களே தவிர எதுவுமே பண்ணலை. நிரந்தரமான தீர்வை ஏற்படுத்தி தரணும். தண்ணீர் போறதுக்கு வழி ஏற்படுத்தி தரணும். கழிவு நீர் மழை நீர்ல கலந்திருக்கிறதால, மோசமான வாடை வீசுது. வசிக்கவே முடியலை. வேற வழியில்லாம நாங்க இஙக் இருக்கிறோம். இதுக்கு அரசு உடனே ஏதாவது நடவடிக்கை எடுத்தா நன்றியுள்ளவங்களா இருப்போம்’ என்றார்.








