தலைமைக் காவலரை ஆபாச வார்த்தைகளால் தொலைபேசியில் திட்டிய நபருக்கு வலைவீச்சு

ஆவடி காவல் நிலையத்தில் தலைமைக் காவலரை தொலைபேசியில் வழக்கறிஞர் என கூறி ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர். ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட ஆவடி காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு…

ஆவடி காவல் நிலையத்தில் தலைமைக் காவலரை தொலைபேசியில் வழக்கறிஞர் என கூறி ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட ஆவடி காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு தலைமை காவலராக பணிபுரிபவர் விக்டர். இவர் நிலத்தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினை விசாரணைக்கு அழைத்தபோது அதில் ஜெயம் என்பவர் விசாரணைக்கு வர மறுத்துள்ளனர். இதனிடையே ஜெயம் தரப்பிலிருந்து உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பேசுவதாகக் கூறி ஆவடி காவல் நிலைய குற்றப் பிரிவு தலைமைக் காவலர் விக்டரை தொலைபேசியில் அழைத்த அந்த நபர், அவரை ஒருமையில் பேசியுள்ளார்.

தலைமை காவலர் விக்டர் நீங்கள் வழக்கறிஞராக இருந்தாலும் ஒருமையில் பேச வேண்டாம் என்று கூறியதை கேட்ட அந்த நபர் தகாத வார்த்தைகளால் சரமாரியாக திட்டியுள்ளார். மேலும் அவரை காவல் நிலையத்துக்கு நேரில் வந்து ஆய்வாளரிடம் பேசுமாறு அழைத்தபோது ஆத்திரம் தாங்காமல் அவர் ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்துள்ளார்.

பின்னர், காவல் நிலையம் வருவதாகக் கூறி தொடர்பை துண்டித்த அந்த வழக்கறிஞர் எனக் கூறிய நபர் காவல் நிலையம் வராத காரணத்தினால் அவரைத் தொடர்பு கொண்டபோது அவரது மொபைல் தொலைபேசி ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. மேலும், இது குறித்து மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான தலைமைக் காவலர் விக்டர் உதவி ஆணையரிடமும், துணை ஆணையரிடமும் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் வழக்கறிஞர் எனக் கூறிய அந்த நபர் பேசிய வார்த்தைகளால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.

பின்னர், தலைமைக் காவலரை தகாத வார்த்தையில் திட்டிய அந்த நபரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்ற நிலையில், வழக்கறிஞர் எனக் கூறி தலைமை காவலரை வசைபாடும் அந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.