செல்ஃபி எடுக்கும் போது பாய்ந்தது சிறுத்தை: காட்டுக்குள் 2 நாள் சிக்கிய இளைஞர்!

செல்ஃபி எடுக்கும்போது சிறுத்தை ஒன்று பாய்ந்து வந்ததால், 2 நாட்களாக காட்டுக்குள் சிக்கிக் கொண்ட இளைஞரை, போலீசார் மீட்டுள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் பலூன் வியாபாரம் செய்து வருபவர் அனுராக் சிங் (30). இவர்…

செல்ஃபி எடுக்கும்போது சிறுத்தை ஒன்று பாய்ந்து வந்ததால், 2 நாட்களாக காட்டுக்குள் சிக்கிக் கொண்ட இளைஞரை, போலீசார் மீட்டுள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் பலூன் வியாபாரம் செய்து வருபவர் அனுராக் சிங் (30). இவர் கடந்த வியாழக்கிழமை மாலை வேலையை முடித்துவிட்டு, தனது வீடு இருக்கும் பிஜ்னூருக்கு பைக்கில் புறப்பட்டார். சில்லா பகுதியில் சென்றுகொண்டிருந்த போது ராஜாஜி புலிகள் சரணாலயத்தின் அருகில் பைக்கை நிறுத்தினார். மலை மற்றும் கங்கை நதியின் அழகு அவரை ஈர்த்தது. அந்தப் பகுதியும் ஜில்லென இருந்ததால், அங்கிருந்து செல்பி எடுத்தார்.

அப்போது திடீரென காட்டுக்குள் இருந்து உறுமல் சத்தம். என்னவென்று பார்த்தார். சிறுத்தை ஒன்று அவர் மீது பாய தயாரானது. சுதாரித்த அனுராக், பரபரத்து காட்டுக்குள் ஓடினார். சிறுத்தை துரத்தியது. வெறு வழியில்லாமல் கங்கை ஆற்றுக்குள் குதித்தார். சிறிது தூரம் நீந்தி அடுத்தக் கரையை அடைந்தார். அதுவும் பெருங்காடு. செல்போன் தொலைந்துவிட்டது.

பேன்ட் பாக்கெட்டில் தீப்பட்டியை, தண்ணீர் புகாதவண்ணம் பிளாஸ்டிக் பையில் வைத்திருந்ததால், அது நனையவில்லை. இரவானதால் தீயை பொருத்தி குளிருக்கு இதமாக கதகதப்பை ஏற்படுத்தினார். பிறகு பயத்தில் ஒரு மரத்தின் மீது ஏறி அமர்ந்துகொண்டார். காலையில் இறங்கி காட்டுக்குள் நடந்தார். எங்கு நடந்தும் வழியை கண்டுபிடிக்க முடியவில்லை. பசி. விலங்குகள் தாக்கலாம் என்ற பயம். மறுநாளும் அதே போல மரத்தில் ஏறி அமர்ந்துகொண்டார்.

அடுத்த நாள் காலையில் அவர் நெருப்பு மூட்டி, வெக்கையை ஏற்படுத்திக் கொண்டார். அதோடு புகையை கண்டு யாராவது வந்து காப்பாற்றுவார்கள் என்று நம்பினார். அதைப் போலவே, புகையை கண்ட சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் ஒரு படகில் ஆற்றைக் கடந்து, அந்தப் பகுதிக்கு சென்றனர். அவர்களைக் கண்டதும் கையை அசைத்து தன்னைக் காப்பாற்றும்படி கத்தினார் அனுராக். இதையடுத்து அவரை மீட்ட வனத்துறையினர் அவருக்கு முதலில், உணவு வழங்கினர். பிறகு வேறு உடையை வழங்கியுள்ளனர்.

இதுபற்றி போலீஸ் அதிகாரி பிரதீப் ராவத் கூறும்போது, நாங்கள் அனுராக்கை கண்டபோது அவர் நடுங்கியபடி இருந்தார் என்றார்.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.