தமிழகம் மட்டுமின்றி கேரளா, மேற்வங்கம், புதுச்சேரி ஆகிய சட்டமன்றங்களுக்கும் விரைவில் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில் மேற்குவங்கம் அரசியல் களம் பரபரப்புக்கு பஞ்சமில்லாத ஒரு பொலிட்டிகல் திரில்லர் படம் போல அரங்கேறி வருகிறது.
கடந்த பத்து ஆண்டுகளாக அரியணையில் அமர்ந்திருக்கும் திரிணாமூல் காங்கிரஸின் மமதா பானர்ஜீ மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றி ஹாட்ரிக் அடிக்கும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். மமதாவின் கனவிற்கு தடையாக மேற்கு வங்க பாஜக வலிமையாக வளர்ந்து நிற்கிறது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 18 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. 2014 நாடாளுமன்ற தேர்தலோடு ஒப்பிட்டால் 16 இடங்கள் கூடுதலாக வென்றிருந்தது பாஜக பாஜகவின் வாக்கு சதவீதம் 40க்கும் மேல் திரிணாமூல் காங்கிரசை விட 3 சதவீதம் மட்டுமே குறைவு. இது மேற்கு வங்கத்தில் பாஜகவின் அசுர வளர்ச்சியை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதன் மூலம் மம்தாவின் வங்கத்து கோட்டையை பாஜக அசைத்து பார்க்கத் தொடங்கியுள்ளது. பாஜகவின் வளர்ச்சி மட்டுமல்ல உட்கட்சிகுழப்புங்களும் மமதாவிற்கு கெட்ட கனவாய் மாறி போயிருக்கிறது. தேர்தலுக்கு நான்கு மாதங்களே, உள்ள நிலையில் மமதாவின் போக்குவரத்து துறை அமைச்சர் சுவேந்து அதிகாரி, திரிணாமூல் காங்கிரசை விட்டு வெளியேறி பாஜகவில் இணைந்து திரிணாமூல் காங்கிரஸுக்கு எதிராக அதிரடி காட்டி வருகிறார். அத்துடன் மமதாவின் வலது கரம் என பார்க்கப்பட்ட முகுல் ராயும் தற்போது பாஜகவில் தஞ்சம் அடைந்துவிட்டார். மேலும் மமதாவின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் நேரடியாக கட்சி தலைமை குறித்து விமர்சித்து வருகின்றனர். இதற்கு காரணம், மமதாவின் உறவினர் அபிஷேக் பானர்ஜியின் கை, கட்சிக்குள்.. ஓங்க ஆரம்பித்திருப்பது தான்.
இப்படி தேர்தலை பலத்த நெருக்கடியுடன் தான் சந்திக்க போகிறார் மமதா பானர்ஜீ. ஆனால் மக்கள் மத்தியில், மமதாவிற்கு இருக்கும் செல்வாக்குடன் ஒப்பிடுகையில் மேற்குவங்கத்தில் பாஜகவிற்கு அப்படியொரு முகம் இல்லை என்பதே யதார்த்தம். ஆகவே மோடி மற்றும் அமித்ஷாவை முன்னிறுத்தியே இந்த தேர்தலை பாஜக சந்திக்கவிருக்கிறது.இப்படி திரிணாமூல் VS பாஜக என மேற்கு வங்க தேர்தல் களம் தயாராகி உள்ள நிலையில் காங்கிரஸும் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. கட்சித்தாவல், வார்த்தை போர் என நாட்கள் செல்ல செல்ல இன்னும் அதிரடிகளை மேற்கு வங்கத்தில் எதிர்பார்க்கலாம்.