மேற்கு வங்க மாநிலத்தை, குஜராத் ஆக மாற அனுமதிக்க மாட்டோம் என மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி, வகுப்புவாதத்தை தூண்டும் வகையில் பரப்புரை மேற்கொண்டதாகவும், மத்திய அரசுக்கு எதிராக பேசியதாகவும் தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக மம்தா பானர்ஜி அளித்த விளக்கம் ஏற்புடையதாக இல்லை என தெரிவித்த தேர்தல் ஆணையம், நேற்று முன்தினம் 8 மணி முதல் நேற்றிரவு 8 மணி வரை மம்தா பானர்ஜி பரப்புரை மேற்கொள்ள தடை விதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தாவில் மமதா பானர்ஜி தனி ஒரு ஆளாக தர்ணாவில் ஈடுபட்டார்.
போராட்டத்திற்கு நடுவே சில இயற்கை ஓவியங்களை வரைந்த மமதா பானர்ஜி, அவற்றை செய்தியாளர்களிடம் காண்பித்தார். ஒரு நாள் பரப்புரை தடை இரவு 8 மணியுடன் நிறைவடைந்ததை அடுத்து, பராசத் என்ற இடத்தில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில், அவர் கலந்து கொண்டார். அப்போது பேசிய மமதா பானர்ஜி, மேற்கு வங்கத்தை ஒரு நாளும் குஜராத் ஆக மாற அனுமதிக்க மாட்டோம் என்றார். தாம் ஒரு தெருப் போராளி என குறிப்பிட்ட அவர், தமது போராட்டத்தின் மூலம் பாஜக தோல்வியை சந்திக்கும் என்றும் தெரிவித்தார்.







