சந்தோஷ் தாமோதரன் தயாரிப்பில் சௌந்தரராஜா-தேவானந்தா நடிப்பில் சாயாவனம் படத்தை இயக்குகிறார் மலையாள இயக்குநர் அனில்.
பிரபல மலையாள திரைப்பட இயக்குநர் அனில், சௌந்தரராஜா மற்றும் தேவானந்தா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ள சாயாவனம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தடம் பதிக்க உள்ளார். இந்தப் படத்தை தாமோர் சினிமா பேனரில் சந்தோஷ் தாமோதரன் தயாரிக்கிறார். நாற்பதுக்கும் மேற்பட்ட மலையாள படங்களை இயக்கியுள்ள இயக்குநர் அனில், முன்னணி மலையாள ஹீரோக்களுடன் பணியாற்றியுள்ளார். அவரது சமீபத்திய படம் மையா இந்தியில் ரிலீசுக்கு தயாராக உள்ளது. 
கடைக்குட்டி சிங்கம், தர்மதுரை, சுந்தரபாண்டியன் உள்ளிட்ட படங்களில் நடித்த சௌந்தரராஜா சாயாவனம் படத்தில் நாயகனாக நடிக்கிறார். சௌந்தரராஜா கதாநாயகனாக நடிக்கும் மூன்றாவது படம் இது. தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி, கர்ணன் புகழ் ஜானகி ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
தனது தமிழ் திரையுலக என்ட்ரிக்கு வித்தியாசமான ஸ்கிரிப்ட் தேவை என்பதை கருத்தில் கொண்டு சாயாவனம் படத்தின் கதையை இயக்குநர் அனில் உருவாக்கியதாக தெரிவித்துள்ளார். சாயாவனம் என்றால் அடர்ந்த காடு என்று பொருள்படும், படத்தில் வரும் கதாபாத்திரங்களின் குணத்தை இது குறிக்கும் வகையில் இந்த தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 
படத்தின் பெரும்பகுதி சிரபுஞ்சியில் படமாக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க மூடுபனி, மழை மற்றும் காடுகளின் பின்னணியில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம் இது என படகுழு நம்பிக்கை தெரிவித்துள்ளனர். விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது.
– தினேஷ் உதய்








