மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 50 லட்சமாவது பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்தாண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி கிருஷ்ணகிரியில் இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு பிசியோதெரபி, பேலியேட்டிவ் கேர், சிறுநீரக சுய டயாலிசிஸ் பைகள் போன்ற 5 வகையான நோய்களுக்கு மருத்துவம் மற்றும் மருந்துகள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், சித்தாலப்பாக்கத்தைச் சேர்ந்த 50 லட்சமாவது பயனாளியான பாஞ்சாலி என்பவருக்கு வீடு தேடி சென்று மருந்து பெட்டகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பின்னர், அவருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.
இதனை அடுத்து, மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் டயாலிசிஸ் செய்யும் விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவன் முதலமைச்சருடன் கலந்துரையாடி நன்றி தெரிவித்தார். இதனை தொடர்ந்து, சங்கீதா என்பவருக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான செயற்கை கால்களை அவர் வழங்கினார். இதனை அடுத்து, முதலமைச்சருடன் கலந்துரையாடிய பயனாளிகள் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்திற்காக அதிநவீன உயிர்காக்கும் உபகரணங்கள் பொருத்தப்பட்ட புதிய 188 அவசர சிகிச்சை ஊர்திகளை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனை அடுத்து, இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தின் குறும்படத்தையும் அவர் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், அமைச்சர் தாமோ அன்பரசன், எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.







