சபரிமலையில் இன்று நடைபெற உள்ள மகர விளக்கு பூஜையை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளதால் கூட்ட நெரிசலை தவிர்க்க பாதுகாப்பு பணியில் 3000 போலிசார் ஈடுபட்டுள்ளனர்.
மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30-ந் தேதி சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை
திறக்கப்பட்டது. அப்போது முதல் தினமும் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது.
ஐய்யப்பனை தரிசிக்க மண்டல பூஜை நாட்களில் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்ததை போல மகரவிளக்கு காலத்திலும் கூட்டம் அலைமோதும்.
இந்த நிலையில் இதன் உச்ச நிகழ்ச்சியாக மகரவிளக்கு பூஜை மற்றும் ஜோதி தரிசனம் இன்று மாலை நடக்கிறது. ஜோதி தரிசனத்தையொட்டி இன்று மாலை 6.20 மணிக்கு ஐய்யப்பனுக்கு ஆபரணங்களை அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும். இதனையடுத்து பொன்னம்பல மேட்டில் ஐய்யப்பன் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் 3 முறை காட்சி தருவார்.
இந்த ஆண்டு மகர ஜோதியை காண கடந்த சில நாட்களாக தரிசனம் செய்ய வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையின் சுற்று வட்டார பகுதிகள் மற்றும் மலை பகுதிகளில் கூடாரங்கள் அமைத்து அங்கேயே தங்கி இருப்பதால் சபரிமலை பக்தர்கள் கூட்டத்தால் திணறி வருகிறது.
மேலும் இன்று மகரவிளக்கு பூஜைக்கு வருவதற்கு முன்பதிவு செய்தவர்களும் இன்று குவிய உள்ளனர். கூட்ட நெரிசலை தவிர்க்க பாதுகாப்பு பணிக்காக பம்பை, சன்னிதானத்தில் 3 ஆயிரம் போலீசார், தேசிய பேரிடர் மீட்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.







