கொரோனா தொற்று பரவல் காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 10,12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வரக்கூடிய நிலையில் மாநில அரசுகள் பல தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில், மாகராஷ்டிராவில் இரவு நேர ஊரடங்கு மற்றும் விடுமுறை நாட்களில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தற்போது 10 மற்றும் 12 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

தொற்று பாதிப்பிலிருந்து மாணவர்களை பாதுகாக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1.35 கோடியை கடந்துள்ள நிலையில், மகாராஷ்டிரா 34,04,245 கொரோனா நோயாளிகளுடன் தொற்று பாதிப்பு வரிசையில் முதல் இடத்தில் உள்ளது. மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 63,294 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 5,67,097 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 27,82,161 பேர் குணமடைந்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் தற்போதுவரை 57,987 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.







