சாலைகளை ஹேமமாலினி கன்னத்துடன் ஒப்பிட்ட அமைச்சர்: வலுக்கும் எதிர்ப்பு

தனது தொகுதியின் சாலைகளை நடிகையும் பாஜக எம்.பியுமான ஹேமமாலினியின் கன்னத்துடன் ஒப்பிட்ட அமைச்சருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனாவை சேர்ந்த குலாப்ராவ் பாட்டீல், குடிநீர் விநியோகம் சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கிறார். இவர்,…

தனது தொகுதியின் சாலைகளை நடிகையும் பாஜக எம்.பியுமான ஹேமமாலினியின் கன்னத்துடன் ஒப்பிட்ட அமைச்சருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனாவை சேர்ந்த குலாப்ராவ் பாட்டீல், குடிநீர் விநியோகம் சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கிறார். இவர், ஜல்கோன் மாவட்டம் போத்வாட் நகர் பஞ்சாயத்து தேர்தல் பிரசாரத்தில் சமீபத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், “30 வருடங் களாக எம்.எல்.ஏவாக இருப்பவர்கள் என் தொகுதிக்கு வந்து சாலைகளின் தரத்தைப் பார்க்க வேண்டும். ஹேமமாலினியின் கன்னம் போல் சாலைகள் இல்லை என்று சொன்னால், நான் ராஜிநாமா செய்து விடுகிறேன்’ என்று சொன்னார்.

பா.ஜ.கவில் இருந்து விலகி, சமீபத்தில் தேசியவாத காங்கிரசில் இணைந்த மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே, இந்த தொகுதியில் நீண்டகாலமாக எம்.எல்.ஏ.வாக இருந்தவர். அவரை விமர்சிக்கும் வகையில் குலாப்ராவ் அப்படி பேசியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், குலாப்ராவ், ஹேமமாலினியின் கன்னத்தை ஒப்பிட்டு பேசும் வீடியோ, சமூக வலைதளத்தில் வைரலானது. இதையடுத்து அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மாநில மகளிர் ஆணைய தலைவர் ரூபாலி சகான்கர், அமைச்சர் குலாப்ராவின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தப் பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் இல்லை என்றால் அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன், ராஜஸ்தான் அமைச்சர் ராஜேந்திர குதா, தனது தொகுதி சாலைகளை, நடிகை கேத்ரினா கைஃப் கன்னங்களுடன் ஒப்பிட்டு பேசியிருந்தார். அது சர்ச்சையாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.