குறைந்தது 3 மாத காலமாவது கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை நாம் பின்பற்றி ஆக வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
பரங்கிமலை ஆயுதப்படை மைதானத்தில் தென் சென்னை போக்குவரத்து காவலர்கள் சார்பில் கொரோனோ விழிப்புணர்வு நாடகம் மற்றும் மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதில் தலைக்கவசம் மற்றும் முகக்கவசம் அணிவது குறித்த பதாகைகளுடன் இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றது. இதனை சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
பின் பேசிய அவர், தற்போது கொரோனா 2-ம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், அதனை தடுக்க தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். கொரோனா குறித்த விழிப்புணர்வுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாக தெரிவித்த அவர், அனைவரும் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருந்தால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்தார்.
மேலும், கொரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், குறைந்தது 3 மாத காலம் இந்த பாதுகாப்பு நடைமுறைகளை நாம் தொடர்ந்து பின்பற்றியே ஆகவேண்டும் எனவும் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.







