குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது அக்கட்சி சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15, அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்திற்கான தகுதி வாய்ந்த பயனாளிகளை கண்டறிய விண்ணப்பங்கள் பெறப்பட்டன. சுமார் 1.70 கோடி விண்ணப்பங்கள் வரை பெறப்பட்ட நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகள் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த இரு நாட்களாக தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளின் வங்கிக்கணக்கிற்கு ஒரு ரூபாய் அனுப்பி வங்கி கணக்குகளை சரிபார்க்கும் பணிகள் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து நேற்று பயனாளிகளின் வங்கிக்கணக்கிற்கு ரூ.1000 அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற விழாவில், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் தலா ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முறைப்படி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தை பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.







