மதுரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது தொடர்பாக தடயவியல் துறை அதிகாரிகள் இன்று 2வது நாளாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை ரயில் நிலையத்தில், யார்டு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயில் பெட்டியில் தேநீர் தயாரிப்பு பணியின்போது கேஸ் சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ரயில்பெட்டி முழுவதும் மளமளவென்று பரவி கொளுந்துவிட்டு எரிந்த தீ விபத்தில், 9 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். உத்தரப் பிரதேசத்தில் இருந்து ஆன்மீக சுற்றுலா வந்த நிலையில், இந்த பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
மதுரை அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்த 9 பேரின் உடல்களுக்கு அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மற்றும் தென்னக இரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் பிரவீன் குமார், மேயர் இந்திராணி, ரயில்வே காவல்துறை ஏ.டி.ஜி.பி வனிதா உள்ளிடோரும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து லக்னோ செல்லும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட உடல்கள், மூன்று ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை விமான நிலையத்திலிருந்து இரண்டு விமானங்கள் மூலம் உடல்கள் இன்று லக்னோ அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில், தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, பாதி எரிந்த நிலையில் கட்டுக்கட்டாக பணத்தை கண்டறிந்தனர்.
இதில் ரூ.200 கட்டுகள், ரூ.500 கட்டுகள் அடங்கிய பணம் பெட்டியில் பாதி எரிந்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ஒருலட்சம் இருக்கக்கூடும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணமாக, ரயிலில் சமைத்து சாப்பிடுவதற்காக சமையல் எரிவாயு உருளைகள், 30 கிலோக்கும் அதிகமான விறகுகள், மண்ணெண்ணெய் அடுப்புகள் இருந்ததே காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.







