மதுரையில் ரயில் பெட்டி தீ விபத்து நேரிட்ட பகுதியில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி இன்று ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.
மதுரை ரயில் விபத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வரும் பயணிகளை, தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிகாலையில் தேநீர் தயாரிக்க எரிவாயு அடுப்பை பற்ற வைத்தபோது அது வெடித்து விபத்து நிகழ்ந்து இருப்பதாக கூறினார்.
ரயில் பெட்டி எரிந்த இடத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி இன்று ஆய்வு செய்ய உள்ளார். தொடர்ந்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் பொதுமக்கள் ஆலோசனை கூட்டத்தில் அவர் பங்கேற்று குறைகளை கேட்டறிய உள்ளார். விபத்தை நேரில் பார்த்தவர்கள், விபத்தை பற்றி தகவல் தெரிந்தவர்கள் பாதுகாப்பு ஆணையரை சந்தித்து தகவல் கூறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.







