மதுரை பாலமேடு அருகே 10 ஆண்டுகளுக்கு பின் சாத்தியார் அணை நிரம்பியதை அடுத்து, குடிநீர் மற்றும் பாசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் பாலமேடு அருகிலுள்ள சாத்தியார் அணை தொடர்மழை காரணமாக முழு கொள்ளளவை எட்டியது. சிறுமலை, மஞ்சமலை உள்ளிட்ட நீர்வரத்து பகுதிகளில் பெய்த கனமழையால், 29 அடி முழு கொள்ளளவு கொண்ட சாத்தியார் அணை, நிரம்பி உபரி நீர் வெளியேறுகிறது.
இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய சாத்தியார் அணை, குடிநீர் மற்றும் பாசன வசதிக்காக இன்று திறந்து வைக்கப்பட்டது. பேரிடர் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், ஆட்சியர் அன்பழகன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் ஆகியோர் சாத்தியார் அணையின் மதகுகளை திறந்து வைத்தனர். தொடர்ந்து மதகுகள் வழியாக வெளியேறிய நீரில் வண்ண மலர்களை தூவி வணங்கினர். இதனிடையே, அணை திறக்கும் நிகழ்ச்சிக்கு தங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்ற அதிருப்தியில், ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.







