மதுரைராமேஸ்வரம் பயணிகள் ரயில் இன்று முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.
கொரோனா காலத்தில் பயணிகள் ரயிலை நிறுத்தி ரயில்வேத்துறை உத்தரவிட்டது. இதனால் அனைத்து பயணிகள் ரயில்களும் ரத்து செய்யப்பட்டு சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தது. தற்போது கொரோனா தொற்று குறைந்ததையடுத்து பயணிகள் ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கொரோனா பேரிடர் காலத்தில் நிறுத்திய ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி தெற்கு ரயில்வே பொதுமேலாளரிடம் ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி மனு கொடுத்தார்.
இதையடுத்து கொரோனா பேரிடர் காலத்தில் நிறுத்திய மதுரை-ராமேஸ்வரம் காலை நேர பயணிகள், ராமேஸ்வரம்-மதுரை மாலை நேர பயணிகள் (பாசஞ்சர்) ரயில்களை இன்று முதல் மீண்டும் இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
2 ஆண்டுகளுக்கு பின் இயக்கப்படும் இவ்விரு வழித்தட ரயில்கள் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், மண்டபம் முகாம், உச்சிபுளி, வாலாந்தரவை, ராமநாதபுரம், சத்திரக்குடி, பரமக்குடி, சூடியூர், மானாமதுரை, ராஜகம்பீரம், திருப்பாசேத்தி, திருப்புவனம், சிலைமான், மதுரை கிழக்கு ஆகிய ஸ்டேஷன்களில் நின்று செல்லும் என கால அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.