மதுரை அழகர் கோவிலில் ஆடிபெருந்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
108 வைணவ தலங்களில் ஒன்றானது மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில். இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருந்திருவிழா விமரிசையாக நடைபெறும். இதையொட்டி நடக்கும் தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள். இந்த ஆண்டு ஆடித்திருவிழா கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையடுத்து, ஒவ்வொரு நாளும் அழகர் வெவ்வெறு வாகனங்களில் வீதிஉலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று இரவு தங்ககுதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளினார். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. அதிகாலை 4.15 மணிக்கு மேல் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அழகர் தேரில் எழுந்தருளினார். பின்னர் 6 மணிக்கு மேல் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பாரம்பரிய முறைப்படி கிராம பொதுமக்கள் ஊர் பங்காளிகள் வருகை தந்து தேரினை வடம் பிடித்து இழுத்தனர். பக்தி முழக்கங்களுடன், பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்தாடி சென்றது காண்பேரை மெய் சிலிர்க்க வைத்தது. உலக புகழ் பெற்ற அழகர் கோவில் ஆடித்திருவிழாவின் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அழகரை வழிபட்டனர்.
தேரோட்டத்திற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் தீயணைப்பு வாகனம், குடிநீர் வாகனம் ஆகியவை தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அழகர் கோவில் தேரோட்ட நிகழ்ச்சி நியூஸ் 7 தமிழ் பக்தி யூடியூப் சேனலில் நேரலை செய்யப்பட்டுள்ளது. அழகரை நேரில் பார்த்து வழிபட முடியாத பக்தர்கள் நியூஸ் 7 தமிழ் பக்தி யூடியூப் சேனல் மூலமாக வழிபடலாம்..
இன்று சந்தன காப்பு நிகழ்ச்சியும், இரவு பூப்பல்லாக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. பின்னார் நாளை மாலையில் புஷ்ப சப்பரமும், நாளை மறுநாள் (14-ம் தேதி) உற்சவ சாந்தியுடன் ஆடிபெருந்திருவிழா நிறைவு பெறுகிறது.
– இரா.நம்பிராஜன்









