நாடு முழுவதும் கல்வெட்டு ஆய்வாளர்களை புதிதாக நியமியுங்கள் என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டின் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் ஆகியோர் சமீபத்தில் மதுரை நாயக்கர் மஹாலில் பார்வையிட்டனர். பின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ் கல்வெட்டுகள் பாழாகிவருகிறது என தமிழ் பண்பாடு குறித்து மத்திய அரசை விமர்சித்து தனது கருத்தை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல், இந்தியா குறித்த அறியாமை உள்ளதாகக் கூறி மநுஸ்ரிப்ட் ட்விட்டர் பக்கத்தையும் டேக் செய்து தமிழில் பதிலளித்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக, தற்போது இந்திய கல்வெட்டு ஆய்வுத் துறையின் பணிகள் போதிய ஊழியர்கள் இல்லாததால் முடங்கும் அபாயம் உள்ளதாகவும், கண்டறியப்பட்டுள்ள 80,000 கல்வெட்டுகளில் 50% மட்டுமே பதிப்பிக்கப்பட்டுள்ளது என்றும், இந்தியத் தொல்லியல் ஆய்வகம் புதிதாக உருவாக்கும் 758 பணியிடங்களில் கல்வெட்டு ஆய்வுக்கென குறைந்தது 40 பணியிடங்களை உருவாக்குங்கள் என்றும் மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

மேலும், இந்தியா முழுமைக்கும் கல்வெட்டு ஆய்வாளர்களைப் புதிதாக நியமியுங்கள்; குறைந்த அளவாக ஒரு மொழிக்கு 2 பேரையாவது நியமியுங்கள் என்றும் சு.வெ கோரியுள்ளார். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் ஆய்வுகள் சம்பந்தமான பணிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையை மத்திய அமைச்சர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.







