மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சுற்றுச்சுவரிலிருந்து 100 மீட்டரை கடந்து மதுரை மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான சீரமைப்பு பணிகள், போக்குவரத்து ஒருங்கிணைப்பிற்கான பணிகள், மெட்ரோ ரயில் பணிமனை அமையவுள்ள இடம் ஆகியவற்றை தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் மு.அ.சித்திக், திட்ட இயக்குனர் தி.அர்ச்சுனன் உள்ளிட்டோர் நேரடி களஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் முதன்மை பொது மேலாளர் ரேகா பிரகாஷ், மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் இணை ஆணையர் கிருஷ்ணன், இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் கலைச்செல்வன், விக்னேஷ் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
இந்த ஆய்வின் போது கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா தெரிவித்ததாவது:
”திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை சந்திப்பு, மீனாட்சி அம்மன் கோயில், புதூர், மாட்டுத்தாவணி மற்றும் மெட்ரோ ரயில் பணிமனை அமையவுள்ள தோப்பூர் ஆகிய இடங்களில் சீரமைப்பு பணிகள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைய உள்ள இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்யப்பட்டது. மேலும் திருப்பரங்குன்றம் மற்றும் மீனாட்சி அம்மன் கோயிலில் இந்திய தொல்பொருள் ஆய்வு தளத்தில் இருந்து மெட்ரோ ரயில் நிலையங்கள் எவ்வளவு தூரம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.
Press Release 11.07.2023 pic.twitter.com/IenPOAaYGn
— Chennai Metro Rail (@cmrlofficial) July 11, 2023
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இந்திய தொல்லியல் துறை மற்றும் சமய அறநிலை துறை விதிமுறைகளை மீறாமல் மெட்ரோ ரயில் நிலையத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி திருக்கோயில்களின் சுற்றுச்சுவரிலிருந்து 100 மீட்டருக்கு அப்பால் மதுரை மெட்ரோ ரயில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்படவுள்ளது. மீனாட்சி அம்மன் கோயில் சுற்றுச்சுவரிலிருந்து 115 மீட்டர் தொலைவில் சுரங்கப்பாதை அமைக்கப்படவுள்ளது.
அதேபோல் திருப்பரங்குன்றம் கோயிலில் இருந்து 160 மீட்டர் தொலைவில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படவுள்ளது. இந்த திருக்கோயில்களின் அருகில் மெட்ரோ இரயில் பணிகள் நடைபெறும் போது பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் எவ்வித இடையூறும் ஏற்படாதவாறு பணிகள் மேற்கொள்ளப்படும்.” இவ்வாறு ரமேஷ் சந்த் மீனா தெரிவித்தார்.







