மதுரை மீனாட்சியம்மன் கோயிலில், வரும் 24ஆம் தேதி நடைபெறவுள்ள திருகல்யாண நிகழ்ச்சி இணையதளம் வாயிலாக நேரலை செய்யப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா, கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணம், வரும் 24-ம் தேதி நடைபெறுகிறது. திருக்கல்யாண நிகழ்ச்சிக்குப் பிறகு, பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் எனக் கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது.
ஆனால், கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வர வாய்ப்புள்ளதால், அந்த அறிவிப்பை கோயில் நிர்வாகம் திரும்பப் பெற்றுள்ளது. வரும் 24-ம் தேதி நடைபெறும் மீனாட்சி திருக்கல்யாணம், இணையதளம் வாயிலாக நேரலை செய்யப்படும் என்றும், திருக்கல்யாண நிகழ்ச்சிக்குப் பிறகு, பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.







