முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

மதுரைவாசிகளின் பாதிபேர் வீட்டு மொய் நோட்டில் இடம்பெற்றிருக்கும் கிரம்மர் சுரேஷ்.!


நிருபன் சக்கரவர்த்தி மா

கட்டுரையாளர்

மதுரைனாலே விழாக்கோலம், கிடாவெட்டு, விருந்து, காதுகுத்து, கல்யாணம், துக்கவீடு, அடிதடி, கோஷ்டிகள் என சத்தத்துக்கு குறையிருக்காது. ஒவ்வொரு ஏரியாலயும் சில கோஷ்டி இருக்கும் – சில பெரும்புள்ளிகள் இருப்பாங்க. அவரு அந்த ஏரியாக்காரக்களுக்கு தலைவனா தெரிவாரு. அந்தவகையில் இந்த வாரம் நம் பார்வைக்கு வந்திருக்கும் ஒரு நபர்தான் மதுரை மத்திய தொகுதியில் இருக்கிற கிரம்மர் சுரேஷ்.

அதிமுகவில் மதுரையில் செல்வாக்கான நபராகவும் மத்திய தொகுதி பொறுப்பாளராக பின் எம்.ஜி.ஆர் மன்ற மாநில இணை செயலாளராக இருந்தவர் கிரம்மர் சுரேஷ். வெள்ளை வேட்டி, சட்டை தாடியுடன் வலம்வரும் அவரு மதுரை மக்களுக்கு மட்டுமில்ல சென்னை மக்களுக்கும் மிகவும் பரிட்சயம் ஏனா? அவர் அடித்த போஸ்டர்கள் அப்படி, தமிழ்நாட்டுல லித்தோ போஸ்டருக்கு பெயர் போனவர்னா அது கிரம்மர் சுரேஷ்தான் சொல்ல முடியும். அவர் அடிக்கிற லித்தோ போஸ்டர்ல இருக்கிற வசனம்தான் ஹைலைட்டு, சில நேரத்துல பிரம்மாண்ட வரவேற்பை பெறும். சில நேரத்தில பெரிய சர்ச்சைய ஏற்படுத்தும். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கைதானப்ப அவர் அடித்த போஸ்டர் தமிழக அரசியலில் பெரிய சர்ச்சையை கிளப்புச்சுனு சொல்லலாம்.

திருமணமே செய்யாம தாடியோட இருக்கிற அவருக்கு, தாடியே ஒரு அடையாளமாகவும் மாறி போச்சு. முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தலைமையில் திமுகவில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய அவரு பகுதி தொண்டரணி அமைப்பாளர், பகுதி மாணவரணி செயலாளர், மாவட்ட மாணவரணி செயலாளர் என பல்வேறு பொறுப்புல இருந்தார். பிற்பாடு முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜனோட தீவிர விசுவாசியாக மாறினார். சில வருசத்துக்கு முன்னாடி  மரணமடைந்த பொட்டு சுரேசும் பி.டி.ஆரோட ஆதரவாளர்தான். இரண்டு சுரேஷ்களும் ஒரே இடத்துல இருக்கிறது குழப்பத்தை ஏற்படுத்துச்சு, அந்த சிக்கல போக்க கிரம்மர்புரம் எனும் தனது ஏரியா பெயரையே அடைமொழியா வச்சுக்கிட்டார். பி.டி.ஆர் பழனிவேல்ராஜன் மரணத்துக்கு பிறகு ஜெயலலிதா முன்னிலையில அதிமுகவில் சேர்ந்தார். எல்லாரும் எந்த கட்சி ஆளுங்கட்சியா இருக்குதோ அந்த கட்சியிலதான் சேருவாங்க ஆனா இவரு அதிமுக எதிர்க்கட்சியா இருக்கிறப்ப போய் சேர்ந்தார். ஜெயலலிதாவுக்கு அவரு அடிச்ச போஸ்டர்களுக்கு கணக்கே கிடையாது.

பிற்பாடு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆதரவாளராக மாறிய அவரு ஒரு கட்டத்துல 2021 தேர்தலில் மதுரை மத்திய தொகுதிய கூட்டணிக்கு ஒதுக்கியதுனால சிறிய மனஸ்தாபத்துல அதிமுக கட்சியில இருந்து விலகுறாரு. தனது சொந்த தொகுதியிலே சுயேட்சையா களம் இறங்குறாரு கிரம்மர் சுரேஷ். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பட்டாளத்தோட தொகுதி முழுதும் வலம் வந்தாரு கடைசியில 3.28% ஓட்டு வாங்குனாரு, தேர்தலுக்கு பிறகு ஒருகட்டத்துல் அவரு சொன்னது என்னானா இனி ஒரு கட்சியில் போய் சேர மாட்டேனு அரசியல விட்டே ஒதுங்கிட்டாரு. அவரோட தாய் சமீபத்தில் இறந்தது அவருக்கு பெரிய இழப்பாகி போச்சு அதுனால, தீவிரமான கிறித்துவத்தை நம்புற அவரு தேவலாயத்துல நம்பிக்கை அளிக்கும் பேச்சுகள்னு அந்த பக்கம் தீவிரமா போயிட்டாரு.

மதுரையில ஒரு காலத்துல பீக்ல இருந்த ஏராளமான இளைஞர்கள் பட்டாளத்த கொண்ட கோஷ்டினா அது கிரம்மர் சுரேஷ் கோஷ்டியதான் சொல்லுவாங்க, ஒரு பள்ளியோட தாளாளராவும் இருக்கும் அவரு மதுரையில யார் விசேஷம் வச்சாலும் அவர் வீட்டுக்கு பத்திரிக்கை போயிருச்சுனாலே முடிஞ்ச அளவுக்கு போயிருவாரு, இல்லே அவர் சார்பாக விசேஷ வீட்டுக்காரங்க மொய் நோட்டுல மொய் பணம் இடம்பெற்றுவிடும். கிட்டதட்ட ஜிகர்தண்டா படத்துல வர அசால்ட் சேது கேரக்டர் மாதிரி வலம் வந்த கிரம்மர் சுரேஷ் ஞாயிற்றுகிழமையான சர்ச்சுக்கு தவறாம போய் இறைபணியில் முற்றிலும் இறங்கி அரசியலை விட்டு விலகியது அவரோட ஆதரவாளருக்கு சற்று இழப்புதான்.

எழுத்து: மா.நிருபன் சக்கரவர்த்தி

Advertisement:
SHARE

Related posts

அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து வழங்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை; மத்திய அரசு தகவல்!

Dhamotharan

5 ஆயிரத்துக்கு அதிகமாக தீப்பெட்டிகளை சேகரித்துள்ள டெல்லி பெண்!

Gayathri Venkatesan

அம்மா மினி கிளினிக்; பழிவாங்கும் நோக்கம் இல்லை-முதலமைச்சர்

Halley Karthik