மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் போலி சான்றிதழ் வழங்கப்பட்டது தொடர்பாக, பல்கலைக்கழக ஊழியர்கள் உட்பட 8 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டுவரும் காமராஜர்
பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்குனரகம் சுமார் 1.20 லட்சம் மாணவர்
எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. இந்த தொலைதூரக் கல்விப் பட்டங்கள், டெல்லி பல்கலைக்கழக மானியக் குழுவால் (UGC) அங்கீகரிக்கப்பட்டு மத்திய மற்றும் மாநில அரசுகளில் வேலைவாய்ப்பிற்குத் தகுதியானவை.
தமிழ்நாட்டில் 99 மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்வி மையங்களும், பிற
மாநிலங்களில் 133 மையங்களும் இயங்கி வருகின்றன. இந்நிலையில், தொலைதூர கல்வியில் மாணவர்கள் தேர்ச்சி மற்றும் சேர்க்கையில் முறைகேடு நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தினா்.
அப்போது, கடந்த 2017-2018ம் ஆண்டில், 34 பிற மாநில பி.காம்., மாணவர்களின்
பதிவு மற்றும் கல்வி கட்டணத்திற்கான டிமாண்ட் டிராப்ட் தொகை, காமராஜர் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்குனர் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்பது தெரியவந்தது.
16,580 பிற மாநில பி.காம்., மாணவர்களில் 858 செல்லாத டி.டி.க்கள் மதுரை
காமராஜர் பல்கலைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதில், சேர்க்கை பிரிவு கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி, தவறான டிடியை சரிபார்க்கவில்லை. மேலும் அவர் அதை பல்கலைக்கழக கணக்கிற்கு அனுப்பவில்லை. பதிவு மற்றும் கல்விக் கட்டணத்தைச் செலுத்தாத 342 மாணவர்களுக்கு பாடநெறி நிறைவுச் சான்றிதழை வழங்கியதும் இதனால் அரசுக்கு 1 லட்சத்து 39 ஆயிரத்து 700 ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது.
மேலும் போலியான மதிப்பெண் சான்றுகளை உருவாக்கி தேர்ச்சி பெறாதவர்களை தேர்ச்சி பெற வைத்ததும், அவர்களுக்கு டிகிரி சான்றிதழ் வழங்கியதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர கல்வியியல் இயக்குனரக முன்னாள் கூடுதல் தேர்வுகட்டுப்பாட்டாளர் ராஜராஜன், முன்னாள் கண்காணிப்பாளர் சத்யமூர்த்தி, கம்யூட்டர் புரோகிராமர் கார்த்திகை செல்வன், முன்னாள் கண்காணிப்பாளர்
ராஜபாண்டி மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர கல்வி ஒருங்கிணைப்பு தனியார் கல்வி நிறுவனங்களை சேர்ந்த ஜிஜி, அப்துல் அஜிஸ்,
சுரேஷ், ஜெயபிரகாஷன் ஆகிய 8 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு
செய்துள்ளனர்.
இதில் முதல் குற்றவாளியான ராஜராஜன் கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில் மற்ற
7 பேரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது. கடந்த 2018-19 ஆம் ஆண்டில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்குனரகத்தில் போலியான ஆவணங்கள் மூலமாக போலி டிகிரி வழங்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-இரா.நம்பிராஜன்








