மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கு – முக்கிய குற்றவாளி யூடியூபர் நிஷாந்த் கைது!

மதுரை நகை கடை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நிஷாந்த் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுரையில் கடந்த அக்டோபர் 14ம் தேதி அன்று மூன்று மாடியுடன் கட்டப்பட்ட தனிஷ்க் தங்க நகை கடை திறக்கப்பட்டது. இந்த நகைக்கடையின் தரைத்தளத்தில் விற்பனை நடைபெற்று கொண்டிருந்த வேளையில், இரண்டாம் தளம் காலியாக இருந்தது. மேலும் அதன் மூன்றாம் தளத்தில் நகைகளை பாதுகாப்பாக வைப்பதற்கான, லாக்கர்களை பொருத்தும் பணி நடைபெற்று வந்தது.

இதையடுத்து கடந்த வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் கடைக்குள் புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள், அங்கிருந்த லாக்கர்களை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவத்தில் கொள்ளையர்களை பிடிக்க ஒன்பது சிறப்பு படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

நகைக்கடையில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் சோதனை நடத்தினர். இந்த நிலையில் நகைக்கடை கொள்ளை வழக்கில் இன்ஸ்டா இன்ப்ளூயன்சர் மீனாட்சி உள்ளிட்ட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் யூடியூபர் நிஷாந்த் என்பவரின் தந்தை சுரேஷை கைது செய்து, அவரிடம் இருந்த 5 கிலோ தங்க நகைகளை போலைசார் மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, நிஷாந்தின் தந்தை சுரேஷ், மீனாட்சி நாச்சியாா் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட நிஷாந்தின் தந்தை சுரேஷ் மற்றும் மீனாட்சி ஆகிய இருவரையும் வரும் நவ. 29 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சங்கீதா உத்தரவு பிறப்பித்துள்ளார். அதைத்தொடர்ந்து சுரேஷ், மீனாட்சி நாச்சியார் இருவரையும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த நிஷாந்த்தை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் சொகுசு பேருந்தில் நிஷாந்த் பயணம் செய்தது தெரியவந்தது. இதில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த நிஷாந்தை பேருந்து நடத்துனர் பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து தருமபுரி அதியமான் கோட்டை காவல்துறையினர் பெங்களூரு சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து சேஷம்பட்டி என்ற இடத்தில் தனியார் பேருந்து சோதனை செய்ததில் நிஷாந்த் அங்கிருந்து தப்பிக்க முயன்று உள்ளார். அப்போது அவரை காவல்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நிஷாந்த் கைது செய்யப்பட்ட சம்பவம் தருமபுரி மாவட்டத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.