சமஸ்கிருதத்தில் உறுதிமொழி – அதிரடி நடவடிக்கை

மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் சமஸ்கிருதத்தில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்ற விவகாரத்தில், கல்லூரி முதல்வர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,…

மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் சமஸ்கிருதத்தில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்ற விவகாரத்தில், கல்லூரி முதல்வர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், மதுரை அரசு மருத்துவக்கல்லூரில் முதலாமாண்டு மாணவர்கள் வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சியில், இப்போகிரேடிக் உறுதிமொழிக்கு பதிலாக மகரிஷி சரத் சப்த் என்னும் உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது கண்டிக்கத்தக்க செயலாகும் என குறிப்பிட்டுள்ளார்.

இதன் பொருட்டு, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், தன்னிச்சையாக விதிமுறைகளை மீறி சமஸ்கிருத உறுதிமொழியை ஏற்க வைத்த டீன் மீது துறை ரீதியாக விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், அனைத்து மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் இனிவரும் காலங்களில் அனைத்து துறை தலைவர்களும் எப்போதும் இப்போகிரேடிக் உறுதிமொழி ஏற்பதை தவறாது கடைப்பிடிக்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், காலம்காலமாய் நடைபெற்றுவரும் இப்போகிரேடிக் உறுதிமொழி எப்படி சமஸ்கிருதத்தில் நடைபெற்றது என்று தெரியவில்லை என கூறினார். மேலும், இது தேவையற்ற செயல் எனக்குறிப்பிட்ட ராதாகிருஷ்ணன், மருத்துவக்கல்லூரி மீது துறை ரீதியாக விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.