மதுரை மாநகராட்சியின் இணையதளம் தொழில்நுட்க கோளாறு காரணமாக இரண்டு நாட்களாக முடங்கியுள்ளதால் பொதுமக்கள் மாநகராட்சி சேவைகளை பெற முடியாமல் உள்ளனர்.
மதுரையை ‘ஸ்மார்ட் சிட்டி’யாக மாற்றுவதற்காக மாநகராட்சி சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் http://www.maduraicorporation.co.in என்ற மாநகராட்சியின் இணையதளமும் வேறு வடிவத்தில் மாற்றி அமைக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நீண்ட காலமாக ஒரே மாதிரி வடிவமைப்பில் இருந்து மாநகராட்சி இணையதளம், சமீபத்தில் புதிய வடிவில் மாற்றப்பட்டுள்ளது. முகப்பில் ‘மாமதுரை போற்றுதும்’ என்ற வாசகம் பின்னணியில் மீனாட்சி அம்மன் கோயில், திருமலை நாயக்கர் மகால், சமண சின்னங்கள், காந்தி மியூசியம் ஆகிய படங்களின் ‘சிலைடு ஷோ’ ஓடுவது போன்று மாற்றப்பட்டுள்ளது.
மேலும் கீழே வைகை வட கரையிலிருந்து மதுரையை சித்தரிக்கும் 18ம் நுாற்றாண்டின் கருப்பு, வெள்ளை ஓவியம் இடம் பெற்றுள்ளது. அடுத்ததாக வரி செலுத்துதல், பிறப்பு, இறப்பு பதிவு, அறிவிப்பு, ஒப்பந்தம் ஆகிய ‘லின்க்’குகள் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழ், ஆங்கில மொழி தேர்வு செய்யும் வசதியும் உள்ளது.
இவ்வாறு உள்ள மதுரை மாநகராட்சியின் இணையதளம் கடந்த இரண்டு நாட்களாக முடக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இணையதளம் முடங்கியுள்ளதாக தெரிவித்துள்ள மாநகராட்சி அதிகாரிகள், அதனை சரிசெய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, மாநகராட்சி இணையதளம் திடீரென முடங்கியதால், கடந்த இரண்டு நாட்களாக பொதுமக்கள் மாநகராட்சி தொடர்பான இணைய சேவைகளை பெற முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
– இரா.நம்பிராஜன்