மதுரையில், தெருவில் சாக்கடை நீர் ஓடுவதாக இளைஞர்கள் டிவிட்டர் மூலம் புகார் அளித்த நிலையில், மாநகராட்சி உடனே தலையிட்டு அதனை சரி செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
சமூக வலை தளங்கள் எத்தனை ஆபத்து நிறைந்ததாக இருக்கிறதோ, அதே வேளையில் அதனை சரியாக பயன்படுத்துவோரும் இருக்கத்தான் செய்கின்றனர். பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வரும் புகைப்படம், வீடியோ போன்றவை சர்ச்சைகளாகவும், சில நன்மைகளாகவும் மாறி விடுகிறது.
பலருக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் ஏராளமான உதவிகள் கிடைத்து வருகிற்து. குறிப்பாக டிவிட்டரில் பதிவிடும் கருத்துகள், குறைகள் சம்மந்தப்பட்டவர்களுக்கு நேரடியாக சென்று சேருகிறது. இதனால் பலர் டிவிட்டரில் நிறை குறைகளின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் டிவிட்டர் மூலம் பதிவிட்ட புகாருக்கு மதுரை மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மதுரை தெற்குத் தொகுதி காமராஜபுரத்தில் உள்ள 45வது வார்டில் குடிநீருடன் சாக்கடை நீர் கலந்துள்ளது. இதனால் தெருக்கள் சாக்கடை நீரில் குளம் போல் காட்சியளித்துள்ளன. இது துர்நாற்றம் வீசுவதோடு, போக்குவரத்துக்கும் சிரமமாக இருந்துள்ளது. இதையடுத்து, அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இது தொடர்பாக மாநகராட்சியை டிவிட்டரில் டேக் செய்து புகார் அளித்துள்ளனர்.
டிவிட்டர் மூலம் இதனை தெரிந்து கொண்ட மாநகராட்சி உடனடியாக அங்கு பணியாளர்களை அனுப்பி சாக்கடை நீரை சுத்தம் செய்து கொடுத்து நடவடிக்கை எடுத்தது. மேலும் அதே டிவிட்டர் வாயிலாக தங்களை இணைத்ததற்கு நன்றி என்றும் உங்கள் புகார் சரி செய்யப்பட்டு விட்டது என்றும் மாநகராட்சி பதில் அனுப்பியுள்ளது. சாக்கடை நீரால் தொற்று ஏற்பட்டு விடும் ஆபத்து இருப்பதாக கருதியதாகவும், ஆனால் மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுத்தது மகிழ்ச்சியளிப்பதாக அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
– இரா.நம்பிராஜன்








