மதுரை கட்டடம் இடிந்து விபத்து : 3 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு!

மதுரை விளாங்குடியில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி பெண் தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் வீட்டு உரிமையாளர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மதுரை சொக்கநாதபுரத்தில் தமிழ் முரசு என்பவருக்கு சொந்தமான…

மதுரை விளாங்குடியில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி பெண் தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் வீட்டு உரிமையாளர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மதுரை சொக்கநாதபுரத்தில் தமிழ் முரசு என்பவருக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டப்பட்டு வருகிறது. வீடு கட்டும் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று வழக்கம் போல 2 பெண்கள், 2 ஆண்கள் என 4 பணியாளர்கள் பணியை செய்து வந்தனர்.

வீட்டின் பக்கவாட்டில் பூச்சு பணியை 4 பணியாளர்கள் செய்து வந்தனர். இந்நிலையில் பூச்சு பணிகள் நடைபெற்ற சுவற்றின் மேலே உள்ள மாடி படிக்கட்டுகள் அப்படியே கீழே விழுந்தது. இந்த சம்பவத்தில் மாடி படிக்கட்டுக்கு கீழே வேலை பார்த்து கொண்டு இருந்த மூக்காயி எனும் மூதாட்டி சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

மேலும் ஜோதி(53), தொண்டிச்சாமி(53), கட்டையன்(41) காயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். தரையிலிருந்து 15 அடி உயரத்தில் கட்டப்பட்ட மாடி படிகட்டின் குறுக்கு கம்பிகள் சரியாக கொடுக்காததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

சுமார் 11 மணியளவில் விபத்து நடைபெற்ற இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் மீட்புப்பணிகளை தொடங்கினார். கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த மூதாட்டி மூக்காயி உடலை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கூடல் புதூர் காவல் துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வீட்டு கட்டிடப் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் அழகுபெருமாள், பொறியாளர் இளமதி மற்றும் வீட்டின் உரிமையாளர் தமிழ் முரசு ஆகிய 3 பேர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.