மத்திய பிரதேசத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக அரசின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே உள்ளது. அங்குள்ள மயானங்களில் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் பல உடல்கள் எரியூட்டப்பட்டு வருகின்றன. தலைநகர் போபாலில் அமைந்துள்ளது பட்பாதா விஷ்ரம்காட் மயானம். இங்கு இந்துக்களின் உடல்கள் மட்டுமே எரியூட்டப்பட்டு வந்த நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை எரியூட்டவும் அனுமதி வழங்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பட்பாதா விஷ்ரம்காட்டின் நிர்வாகக் குழுச் செயலாளர் மம்தேஷ் சர்மா அளித்த பேட்டியில், “150க்கும் மேற்பட்ட அஸ்திக் கலசங்கள் வைக்கும் லாக்கர்கள் எங்களிடம் உள்ளன. உயிரிழப்புகள் அதிகரிப்பதால் ஒவ்வொரு நாளும் 10 – 15 வரையில் அஸ்திக் கலசங்கள் வைக்கும் லாக்கர்கள் நிரம்பி வருகின்றன. தற்போதுதான் முதல்முறையாக அஸ்திக் கலசங்கள் வைக்கும் லாக்கர்கள் அதிகப்படியாக நிரம்புகிறது” என்று குறிப்பிட்டார்.
அஸ்திக் கலசங்களுக்கான இடங்களை வைப்பதற்கு புதிதாக 500 லாக்கர்களை உருவாக்கியிருப்பதாகவும், சூழலைப் பொறுத்து கூடுதல் இடங்களை உருவாக்கவும் தயாராக இருப்பதாக அவர் கூறினார். மேலும், விஷ்ரம்காட் மயானத்தில் மட்டும் கிட்டத்தட்ட 1,100 உடல்கள் எரியூட்டப்பட்டதாக மம்தேஷ் சர்மா கூறியுள்ளார். அதில் 800 உடல்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி எரியூட்டப்பட்டதாகவும் தகவல் தெரிவித்தார்.
“விஷ்ரம்காட்டில் ஏப்ரல் 16ஆம் தேதி மட்டும் 81 உடல்கள் எரியூட்டப்பட்டுள்ளன. 69 உடல்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் எரியூட்டப்பட்டன. 46 உடல்கள் போபாலில் இருந்தும், 23 உடல்கள் மாநிலத்தின் மற்ற பகுதிகளில் இருந்தும் வந்தவை” எனவும் அவர் தெரிவித்தார்.
அதே சமயம், மத்திய பிரதேச மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில், கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைத்தே காட்டப்பட்டுள்ளது. அதாவது ஏப்ரல் 16ஆம் தேதி கொரோனாவால் இறந்த 60 பேரில் 4 பேர் மட்டுமே போபாலைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ளது. ஏப்ரல் 1 முதல் 16 வரை 38 பேர் மட்டுமே போபாலில் உயிரிழந்ததாகவும் அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
எரியூட்டப்படும் எண்ணிக்கைக்கும், அரசின் புள்ளிவிவரங்களுக்கு மிகப்பெரிய வேறுபாடுகள் இருப்பது கடுமையான சர்ச்சைகளை உண்டாக்கியது. இதுதொடர்பாக பதிலளித்த மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், இறந்தவர்களில் கொரோனா பாதிப்பு இருக்கலாம் என சந்தேகித்தவர்களையும் கொரோனா வழிகாட்டு முறைகளுடன் எரியூட்டப்பட்டனர். மற்ற நோய்களில் இருந்தவர்களும் உயிரிழந்தனர் என்று விளக்கம் அளித்தார்.