இன்று மாலை மதுசூதனன் உடல் நல்லடக்கம்

உடல்நலக்குறைவால் காலமான அதிமுக அவைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான மதுசூதனனின் இறுதிச் சடங்கு சென்னையில் இன்று மாலை நடைபெற உள்ளது.   கடந்த சில ஆண்டுகளாக மதுசூதனன் உடல் நலக்குறைவால் அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார்.…

உடல்நலக்குறைவால் காலமான அதிமுக அவைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான மதுசூதனனின் இறுதிச் சடங்கு சென்னையில் இன்று மாலை நடைபெற உள்ளது.

 

கடந்த சில ஆண்டுகளாக மதுசூதனன் உடல் நலக்குறைவால் அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார். கடந்த மாதம் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து, சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில், வென்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உடல்நலக்குறைவால் நேற்று பிற்பகல் அவர் காலமானார்.

எம்.ஜி.ஆர் ரசிகராக இருந்த மதுசூதனன், அதிமுகவை எம்.ஜி.ஆர் தொடங்கியபோதே அக்கட்சியில் இணைந்தவர். கடந்த 2007ம் ஆண்டு முதல் அதிமுக அவைத்தலைவராக மதுசூதனன் பதவி வகித்து வந்தார். மதுசூதனன் இருக்கும் வரை, அவர்தான் அவைத்தலைவர் என, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி அவைத்தலைவர் மாற்றப்படவில்லை. கடந்த 1991ல் சட்டசபை தேர்தலில் ஆர்கே நகர் தொகுதியில் வெற்றி பெற்ற மதுசூதனன், அப்போதைய ஜெயலலிதா அமைச்சரவையில் கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சராக பணியாற்றினார்.

கடந்த 2017ம் ஆண்டு, அதிமுக இரண்டாக பிரிந்த போது, ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக மதுசூதனன் இருந்தார். இரு அணிகள் இணைந்தபோது, அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்பதில் மதுசூதனன் முக்கிய பங்குவகித்தார். அதிமுக சின்னத்தை அவைத்தலைவரான மதுசூதனனிடமே தேர்தல் ஆணையம் வழங்கியது நினைவுகூரத்தக்கது.

 

இதனிடையே, இன்று அதிகாலை 3 மணியளவில் தனியார் மருத்துவமனையிலிருந்து சென்னை திருவொற்றியூரில் உள்ள இல்லத்திற்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் அங்கு வைக்கப்படுகிறது. தொடர்ந்து, இன்று மாலை மூலக்கொத்தளத்தில் உள்ள மயானத்தில் இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.