யூடியூபர் மதன் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் நடத்தி வந்த இரண்டு யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன.
ஆன்லைன் விளையாட்டின்போது சிறார்களிடம் ஆபாசமாக பேசிய வழக்கில், யூடியூபர் மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகாவை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், ஆன்லைன் விளையாட்டை பின்தொடர்ந்து வரும் சிறார்கள் மற்றும் பெண்களுடன் மதன் ஆபாசமாக பேசி, அதன்மூலம் பணம் சம்பாதித்தது தெரியவந்தது. மோசடியாக சம்பாதித்த பணத்தில் சொகுசு கார், ஆடம்பரமான பங்களாக்கள் வாங்கி குவித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.

இதற்கிடையே, மதன் நடத்தி வந்த சர்ச்கைக்குரிய யூ-டியூப் சேனல்களை தடை செய்யக்கோரி போலீசார் சார்பில் யூடியூப் சேனல் நிர்வாகத்துக்கு கடிதம் எழுதப்பட்டது. அந்த கடிதத்தை தொடர்ந்து யூடியூப் சேனல் நிர்வாகம், மதன் நடத்தி வந்த toxic Madan 18+, madan ஆகிய இரண்டு சேனல்களையும் முடக்கியுள்ளது. மேலும், அந்த யூடியூப் சேனல்களில் 2 ஆண்டுகளாக பதிவேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய வீடியோக்களும் நீக்கப்பட்டன. Madan girlfan, Richie gaming up என மேலும் இரண்டு மதனின் யூடியூப் சேனல்களை முடக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்நிலையில், யூடியூபர் மதனை காவலில் எடுத்து விசாரிக்க சைபர் கிரைம் போலீசார் முடிவு செய்துள்ளனர்.







