சென்னையில் சொகுசு கப்பல் திட்டம் – ஜூன் 4-ம் தேதி தொடக்கம்

சென்னையில் சொகுசு கப்பல் சேவை ஜூன் 4-ம் தேதி முதல் தொடங்கப்படும் நிலையில், cordelia கப்பல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டதாக சென்னை துறைமுக ஆணையத்தலைவர் தெரிவித்துள்ளார்.  சென்னையில் இருந்து சொகுசு கப்பல் மூலம்…

சென்னையில் சொகுசு கப்பல் சேவை ஜூன் 4-ம் தேதி முதல் தொடங்கப்படும் நிலையில், cordelia கப்பல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டதாக சென்னை துறைமுக ஆணையத்தலைவர் தெரிவித்துள்ளார். 

சென்னையில் இருந்து சொகுசு கப்பல் மூலம் ஆழ்கடல் பகுதிக்கு சென்று திரும்பும் வகையில் சுற்றுலா திட்டம் வடிவமைக்கப்பட்டிருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்திருந்தார். ஜூன் மாதம் முதல் சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பலில் ஆழ்கடல் பகுதிக்கு சென்று திரும்பும் வகையில் சுற்றுலா அமைக்கப்படும் என்றும், 2 நாள் சொகுசு கப்பல் சுற்றுலா திட்டம் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட உள்ளது என்றும் அவர் கூறியிருந்தார். விசாகப்பட்டினம் – சென்னை வழியாக புதுச்சேரி செல்லும் சொகுசு கப்பல் பயணத் திட்டமும் தொடங்கப்படும் என்று அமைச்சர் மதிவேந்தன் குறிப்பிட்டிருந்தார்.

சென்னை துறைமுகத்திலிருந்து cordelia நிறுவனத்தின் சொகுசு கப்பல் சேவை ஜூன் 4 ஆம் தேதி தொடங்கி வைக்கப்படுகிறது. சொகுசு கப்பல் 11 தளங்கள் கொண்டதாகவும், இந்தியாவின் பெரிய சொகுசு கப்பல்களுள் ஒன்றாகவும் அமைந்துள்ளது. செப்டம்பர் 23-ம் தேதி வரை சென்னையிலிருந்து ஆழ்கடல் சுற்றுலா, விசாகப்பட்டினம், புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு சுற்றுலா செல்லும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

சுற்றுலா திட்டங்களுக்கு ஏற்ப ரூ 22,915 முதல் ரூ 2,37,000 வரை கட்டணம் வசூலிக்கப்படும் என கூறப்படுகிறது. உணவகங்கள், விளையாட்டு தளங்கள், கலைநிகழ்வுகளுக்கான அரங்கம் வசதிகளுடன் கப்பல் விருந்து, கொண்டாட்டங்கள் மட்டுமல்லாமல் ஆழ்கடல் பகுதியில் திருமணங்கள் நடத்துவதற்கு, அலுவலக மீட்டிங்குகளுக்கான வாய்ப்பு வழங்கப்படும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சொகுசு கப்பல் சேவையின் சோதனை ஓட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இது தொடர்பாக சென்னை துறைமுக ஆணையத்தலைவர் சுனில் பாலிவால் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், சொகுசு கப்பல் சேவை தொடர்பான கருத்தரங்கு மும்பையில் நடைபெற்றபோது cordelia கப்பல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறினார்.

சென்னை துறைமுகத்திற்கு வருடத்தில் 4 முதல் 5 தடவை மட்டுமே சொகுசு கப்பல் வரும் என்ற நிலையில், சென்னை துறைமுகத்திலிருந்து 2.5 வருடத்திற்கு பிறகாக சொகுசு கப்பல் சேவை cordelia கப்பல் ஜூன் 2-ம் தேதி முதல் செப்டம்பர் 23-ம் தேதி வரை சுற்றுலா சேவை வழங்கும் என்றார். சொகுசு கப்பலில் 2 இரவு சுற்றுலா திட்டம், 5 இரவுகள் சுற்றுலாவாகவும் மற்றும் விசாகப்பட்டினம் – புதுச்சேரி செல்லும் வகையில் சொகுசு கப்பல் சுற்றுலா திட்டம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேபோல், சர்வதேச கப்பல்கள் சென்னை வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுனில் பாலிவால் தெரிவித்தார். சொகுசு கப்பல்கள் சென்னை வரும்போது சுற்றுலா பயணிகள் சென்னையை ரசிப்பதற்கான சூழல் இருக்கும். சென்னையை பிடித்து போகிறவர்கள் மீண்டும் பல நாட்கள் சுற்றுலா மேற்கொள்வதற்காக வர வாய்ப்பு உள்ளது. மேலும் சென்னை துறைமுகத்தில் புதிய கப்பல் முனையம் தயாராகியுள்ளது என்ற சுனில் பாலிவால், வழக்கமாக சென்னையிலிருந்து பயணிகள் கப்பல் சேவை அந்தமானுக்கு செல்லும் என்றும் எதிர்காலத்தில் சென்னையிலிருந்து விசாகப்பட்டினம், புதுச்சேரி மட்டுமல்லாமல் இலங்கையில் சூழல் சரியானால் கொழும்பு வரை செல்லவும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.