நளினி மனுவுக்கு பதிலளிக்க சிறைத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மருத்துவ காரணங்களுக்காக கணவர் முருகனுக்கு 6 நாட்கள் பரோல் வழங்கக் கோரி நளினி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக சிறைத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில்…

மருத்துவ காரணங்களுக்காக கணவர் முருகனுக்கு 6 நாட்கள் பரோல் வழங்கக் கோரி
நளினி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக சிறைத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினி
தாக்கல் செய்துள்ள மனுவில், ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தனக்கு தமிழ்நாடு அரசு பரோல் வழங்கியதால் தாய் பத்மாவுடன் தங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் வேலூர் சிறையில் இருக்கும் தனது கணவர் முருகனுக்கு பரோல் வழங்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

31 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவிக்கும் தங்களை விடுதலை
செய்வது தொடர்பான தமிழ்நாடு அரசின் விடுதலை தீர்மானத்தின்படி இன்னும் விடுதலை
செய்யப்படவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். மருத்துவ காரணங்களுக்காக கணவர் முருகனை 6 நாட்கள் பரோலில் செல்ல அனுமதிக்கக்கோரி மே 26ஆம் தேதி தானும், மே 21ஆம் தேதி தனது தாய் பத்மாவும் தமிழ்நாடு அரசிடம் மனு அளித்ததாகவும், அவை இதுவரை பரிசீலிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தனது கணவர் முருகனை 6 நாட்கள் பரோலில் செல்ல அனுமதிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்நிலையில்,
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் முகமது சபீக் அமர்வு,
ஜூன் 13ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழக சிறைத்துறைக்கு உத்தரவிட்டு,
விசாரணையை ஒத்திவைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.