காதலுக்காக உயிர்விட துணிந்த காதலர்கள்

கடலூர் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவனும் மாணவியும் விஷம் குடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் முதுநகர் அருகே மேற்கு ராமாபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் மேற்கு ராமாபுரம், கிழக்கு ராமாபுரம்,…

கடலூர் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவனும் மாணவியும் விஷம் குடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் முதுநகர் அருகே மேற்கு ராமாபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் மேற்கு ராமாபுரம், கிழக்கு ராமாபுரம், வழிசோதனைபாளையம், ஆண்டையார்தோப்பு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தப் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனும், ஒரு மாணவியும் எறும்பு மருந்தை தின்று மயங்கிய நிலையில் இருந்துள்ளனர். இது குறித்து சக மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ஆசிரியர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தகவல் அறிந்த கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, தாசில்தார்
பூபாலச்சந்திரன், திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா மற்றும் போலீசார், கடலூர் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று அந்த மாணவன் மற்றும் மாணவியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த மாணவனும், மாணவியும் கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்ததாகவும், இந்நிலையில் அந்த மாணவி தனக்கு தோல் நோய் இருப்பதால், தான் சாகப் போவதாக அந்த மாணவனிடம் கூறியுள்ளார்.

இதனால் அந்த மாணவன் எறும்பு மருந்தை கரைத்து குடித்துள்ளார். இது குறித்து அறிந்த அந்த மாணவியும் எறும்பு மருந்தை குடித்தது தெரியவந்தது. இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.