ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி அதிகரித்து, வர்த்தக பற்றாக்குறை இரண்டரை லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்ததால் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஆபத்தா ? நிபுணர்கள் சொல்வது என்ன ? அது குறித்து பார்க்கலாம் ?
மத்திய அரசின் வர்த்தகத் துறை, ஜூலை மாதத்திற்கான ஏற்றுமதி, இறக்குமதி குறித்த தரவுகளை வெளியிட்டது. அதன் படி, இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி புள்ளி எட்டு சதவீதம் குறைந்து, 35 பில்லியன் அமெரிக்க டாலர் ஆக இருந்தது. அதே சமயம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அளவு 43 சதவீதம் அதிகரித்து 66 பில்லியன் அமெரிக்க டாலர் ஆக இருந்தது. உள்நாட்டு விநியோகத்தை அதிகரிக்க அரசு எடுத்த சில நடவடிக்கைகளும் பலனளிக்காததால், ஏற்றுமதியில் பாதிப்பை ஏற்படுத்தியது. ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு கடந்த பிப்ரவரி 2021 க்குப் பிறகு முதல் முறையாக இந்தியாவின் ஏற்றுமதி குறைந்துள்ளது குறிப்பிடதக்கது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதே போல் வர்த்தக பற்றாக்குறை அளவு 31 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இதற்கு முன்பு வர்த்தக பற்றாக்குறை 26 பில்லியன் டாலராக இருந்ததே அதிகபட்ச அளவு என கருதப்பட்டது. எரிபொருள் இறக்குமதிக்கு ஆகும் செலவு , பெட்ரோலியத்திற்கு 70 சதவீதமும், நிலக்கரிக்கு 165 சதவீதமும் அதிகரித்ததே வர்த்தக பற்றாக்குறை உயர்வுக்கு காரணம் என்று மத்திய வர்த்தக துறை செயலாளர் பிவி சுப்ரமணியம் கூறியுள்ளார்.
மேலும், நடப்பு நிதியாண்டின் ஏற்றுமதி இலக்கான 470 பில்லியன் டாலர் அளவை, எட்டும் விதமாக, நிதியாண்டின் 4 மாதங்களில் 156 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி நடைபெற்றுள்ளது. எனவே அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த தொழில்துறை நிபுணர்கள், பணவீக்கம் அதிகரிப்பு மற்றும் வரி அதிகரிப்பு சில துறைகளில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் தொய்வை ஏற்படுத்த காரணமாக அமைந்துவிட்டது . குறிப்பாக ஜவுளி, பொறியியல், ஆபரணங்கள் மற்றும் ரத்தினங்கள் மற்றும் ஆகிய துறைகளின் ஏற்றுமதி சரிவை சந்தித்தன என்கின்றனர்.
வர்த்தக பற்றாக்குறை அதிகரித்தது குறித்து, மதிப்பீட்டு நிறுவனமான இக்ரா ((icra), ன் தலைமைப் பொருளாதார நிபுணர் அதிதி நய்யார் கூறுகையில், “உலகப் பொருளாதார மந்தநிலை அச்சங்களை எதிர்கொள்ள வேண்டுமென்றால், ஏற்றுமதி வர்த்தகத்தின் அளவு அதிகரிக்க வேண்டும். மேலும் குறைந்த விலை பொருட்களை ,சந்தையில் அதிகப்படுத்தும் போது பற்றாக்குறையை குறைக்க உதவும் என்கிறார்.
வர்த்தக பற்றாகுறை அதிகரித்துள்ளது குறித்து இப்போது அச்சப்பட்ட வேண்டியதில்லை. ஆனாலும் இது ஒரு எச்சரிக்கையாக கருதி, அரசாங்கம் வர்த்தக பற்றாக்குறையை கட்டுப்படுத்த கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவிக்கிறார். கொரோனா தொற்றுக்கு பின்பு, பொருளாதார நடவடிக்கைகளில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ரா.தங்கபாண்டியன், நியூஸ் 7 தமிழ்